குளிர்காலம் கதவைத் தட்டுகிறது! உங்கள் வீடு கதகதப்பாக இருக்கவும், மின்கட்டணம் குறையவும் என்ன வழி?
இலையுதிர் காலம் (L'automne) விடைபெற்று, "குளிர்காலம் வருகிறது"
குளிர்காலம் கதவைத் தட்டுகிறது! உங்கள் வீடு கதகதப்பாக இருக்கவும், மின்கட்டணம் குறையவும் என்ன வழி?
பிரான்ஸ் நாட்டில் இலையுதிர் காலம் (L'automne) விடைபெற்று, "குளிர்காலம் வருகிறது" என்று சொல்லும் அளவுக்குக் குளிர் வாட்டத் தொடங்கிவிட்டது. வீடுகளில் உள்ள 'ரடியேட்டர்கள்' (Radiateurs) மீண்டும் உயிர்பெறத் தொடங்கியுள்ளன. "என் வீட்டில் குளிரே இருக்கக் கூடாது, ஆனால் மின்சாரக் கட்டணம் (Facture) எகிறக் கூடாது" என்பதுதான் பலரது கவலையாக உள்ளது. இதற்காக 'தெர்மோஸ்டாட்' (Thermostat) கருவியில் எந்த எண்ணை அமைப்பது? அரசாங்கமும், சூழலியல் அமைப்பான ADEME-யும் சில முக்கியப் பரிந்துரைகளை வழங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக 19°C என்பது நிலையான அளவீடாகச் சொல்லப்பட்டாலும், உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் (Pièce) இது மாறுபடும்.
இதோ, உங்கள் இல்லத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றச் சரியான வெப்ப அளவு:
1. Salon & Salle à manger - வரவேற்பறை & உணவுக்கூடம்
நாளின் பெரும்பகுதியை நாம் செலவிடும் இடங்கள் இவை.நீங்கள் வீட்டில் இருக்கும்போது: இங்கு 19°C அளவு வெப்பம் இருப்பது இதமானது.நீங்கள் வேலையில்/வெளியில் இருக்கும்போது: அறையில் ஆட்கள் இல்லாதபோது, வெப்பத்தை 16°C முதல் 17°C வரை குறைத்து வைப்பது சிறந்தது.
2. படுக்கையறை
இங்குதான் பலரும் தவறு செய்கிறார்கள்! தூங்கும் அறை அதிக வெப்பமாக இருந்தால் தூக்கம் கலையும்.ஆழ்ந்த உறக்கத்திற்கு 16°C முதல் 17°C வெப்பநிலையே போதுமானது என்று Engie நிறுவனம் பரிந்துரைக்கிறது. குளிர்ந்த அறையில், ஒரு தடிமனான போர்வையைப் போர்த்திக்கொண்டு உறங்குவதே உடலுக்கு நல்லது.
3. Chambre d'enfant - குழந்தைகள் அறை
பகல் பொழுதில்: குழந்தைகள் விளையாடும்போது அல்லது பாடம் படிக்கும்போது 19°C இருக்கலாம்.இரவு நேரத்தில்: பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் 17°C போதுமானது.
4. Salle de bain - குளியலறை
வீட்டிலேயே அதிக கதகதப்பு தேவைப்படும் இடம் இதுதான். ஆனால், நாள் முழுவதும் அல்ல!நீங்கள் குளிக்கும்போது: அந்தச் சிறிது நேரம் மட்டும் 22°C வரை வெப்பத்தை ஏற்றலாம்.மற்ற நேரங்களில்: இதை 17°C அளவில் வைத்திருப்பதே போதுமானது.
சில வீடுகள் 'Passoires thermiques - வெப்பம் கசியும் வீடுகள்போல இருக்கும். அதாவது, நாம் கஷ்டப்பட்டு உருவாக்கும் வெப்பம் ஜன்னல், கதவு இடுக்குகள் வழியே வெளியேறிவிடும். இதைத் தடுக்க இதோ சில வழிகள்: ஜன்னல்களில் தடிமனான திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள். இரவு நேரத்தில் இது குளிரைத் தடுக்கும் கேடயமாகச் செயல்படும். (ஆனால், திரைச்சீலைகள் 'ரடியேட்டர்' மீது படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்). Boudin de porte: கதவுக்கு அடியில் குளிர்ந்த காற்று ஊடுருவாமல் இருக்க, துணியால் ஆன உருளை வடிவத் தடுப்புகளை வையுங்கள். வெப்பமூட்டப்படாத அறைகளின் (உதாரணமாக: வீட்டின் நுழைவாயில் அல்லது நடைபாதை) கதவுகளை மூடி வைத்தால், மற்ற அறைகளின் வெப்பம் வீணாகாது.
குறைந்த வெப்பம், நிறைந்த ஆரோக்கியம்? ஓர் ஆய்வுத் தகவல்!
"சற்று குளிராக இருப்பது உடலுக்கு நல்லது" என்கிறது ஒரு புதிய சமூகவியல் ஆய்வு. பரிசோதனை முயற்சியாக, தங்கள் வீட்டு வெப்பநிலையை 14°C முதல் 18°C வரை குறைத்து வைத்து வாழ்ந்த குடும்பங்களிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்த நன்மைகள்: துயில் (Sommeil): தூக்கத்தின் தரம் மேம்பட்டுள்ளது.
சோர்வு நீக்கம்: உடல் சோர்வு குறைந்து புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.
நோய் எதிர்ப்பு: குளிர்கால நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் கூடியுள்ளது.
எனவே, இந்த முறை 'ரடியேட்டர்' அளவைச் சற்று குறைத்துவிட்டு, ஒரு அழகான Pull - கம்பளிச் சட்டை அணிந்து பாருங்கள். உங்கள் ஆரோக்கியமும் மேம்படும், மாத இறுதியில் வரும் மின்சார கட்டண தொகையும் உங்களை அச்சுறுத்தாது!
சிவா சின்னப்பொடி


