Breaking News
சீத்தைப் புலி எனப் பெயர் சூட்டியவர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை.
.
புலியினத்தைச் சேர்ந்த சீட்டா (Cheetah) என்ற விலங்கு, தமிழில் சிவிங்கிப்புலி என அழைக்கப்படுகிறது.
சீத்தைப் புலி என்றும் இதை அழைக்கலாம். இந்த விலங்குக்கு சீத்தைப் புலி எனப் பெயர் சூட்டியவர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை.
1954ஆம் ஆண்டு அவர் தொகுத்து வெளியிட்ட ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்ற பொது அறிவுப்புத்தகத்தில் இந்தப் பெயர் இடம்பெற்றுள்ளது.
சீத்தைப்புலி, உடல் முழுக்க புள்ளிகள் கொண்ட ஒரு விலங்கு. அதுபோல வடமொழியில் சீத்தல் (Chital) என்ற சொல் புள்ளிமானைக் குறிக்கும். தமிழில் இருந்தே இந்தப் பெயர் வந்திருக்கலாம்.
சீய்த்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு தெறித்தல் என்ற பொருள் உண்டு. ‘பாற்புகை முகிலைச் சீய்த்து பளிச்சென திங்கள் சேவல்’ என்று அழகின் சிரிப்பு நூலில் பாவேந்தர் பாரதிதாசன் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். சீய்ப்பதானாலும் (தெறிப்பதனாலும்) புள்ளிகள் வருவதுண்டு.
தமிழில், புள்ளிகள் பொறித்த ஓர் உயிருக்கோ, பொருளுக்கோ, சீத்தை என்பது பொதுவான பெயர்.
கடல்மேல் பறக்கும் காவாப்புள் இனத்தைச்சேர்ந்த பறவைகளில் ஒன்று சீத்தாப்புள். அது புள்ளிகள் கொண்ட பறவை என்பதால் அந்தப் பெயரைப் பெற்றிருக்க வேண்டும்.
சண்டைச் சேவல்களில் கூட வண்ணப் புள்ளிகள் பொறித்த சேவல் வகைக்கு சீத்தா என்று ஒரு பெயர் உண்டு.
சீத்தைத் துணி என்பது அச்சிடப்பட்ட பருத்தித் துணியைக் குறிக்கும். இது இலங்கை வழக்குச் சொல்.
அதுபோல சீத்தாப்பழத்துக்கும் கூட அதன் மேலே உள்ள புள்ளிகள் போன்ற உருவத்தோற்றம் காரணமாக அந்தப் பெயர் வந்திருக்கலாம்.
மோகன ரூபன் முகநூல் பதிவு 20.12.2024.