நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் – தனுஷ் தரப்பு கூறும் காரணம் என்ன?
.
நயன்தாரா குறித்த நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் வரும் 18ஆம் தேதேதி வெளியாகிறது
நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள தன்னைப் பற்றிய ஆவணப் படத்தின் டிரெய்லரில், ‘நானும் ரௌடிதான்’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட 3 விநாடி வீடியோவை பயன்படுத்தியதற்காக, அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரியதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
தனுஷ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் நயன்தாரா இன்று (நவம்பர் 16) வெளியிட்ட அறிக்கை, திரையுலகில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் தனுஷ் தரப்பில் நேரடியாக எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், நயன்தாரா தரப்புக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் தனுஷ் தரப்பின் வாதங்களைக் குறிப்பிட்டுள்ளார், அவருடைய வழக்கறிஞர் அருண்.
அவர், “நானும் ரௌடிதான் படத்திற்கான பதிப்புரிமை உரிமையாளர் வண்டர்பார் தயாரிப்பு நிறுவனம்தான் என்பதை நயன்தாரா தரப்பு மறுக்கவில்லை என்பதே, என் வாடிக்கையாளர்தான் (தனுஷ்) படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளுக்கும் உரிமையாளர் என்பதை நிறுவப் போதுமானது” என்று அவர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவுக்கு ஆதரவாகப் பல்வேறு நடிகைகள் அவருடைய அறிக்கையை இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த சர்ச்சையின் பின்னணி என்ன?
நயன்தாரா, தனுஷ் சர்ச்சை என்ன?
நடிகை நயன்தாரா தனது வாழ்க்கை, காதல், திருமணம் ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ளும் ஆவணப்படமான (Docu-drama) ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairytale) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த 2022, ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணமானது. இவர்களுடைய திருமணம் முடிவடைந்த நிலையிலேயே நெட்பிளிக்ஸின் இந்த ஆவணப்படம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில்தான் நயன்தாரா இன்று தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் தனுஷ் குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
நயன்தாரா கூறுவது என்ன?
மூன்று பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சம் இதுதான்:
“நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, அதில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் படப்பிடிப்பின்போது, தனிநபர் சாதனங்கள் மூலம் எடுக்கப்பட்ட வெறும் 3 விநாடி வீடியோ மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், அதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக” நயன்தாரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆவணப் படத்தில் திரைத்துறையைச் சேர்ந்த தனது நலம்விரும்பிகள் பலரும் பங்களித்து இருப்பதாகவும் தன்னுடைய பல திரைப்படங்கள் குறித்த நினைவுகள் இடம்பெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நயன்தாரா, தனது மிகச் சிறப்பான மற்றும் முக்கியத் திரைப்படமான ‘நானும் ரௌடிதான்’ இடம்பெறாதது தனக்கு வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆவணப் படத்தின் டிரெய்லரில், நயன்தாராவுடன் பணியாற்றிய இயக்குநர் அட்லி, நடிகை ராதிகா, நடிகர் ராணா டகுபதி, நாகார்ஜூனா, இயக்குநர் விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் நயன்தாரா குறித்துப் பேசியுள்ளதைப் பார்க்க முடிகிறது.
மேலும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் காதல், திருமணம் குறித்துப் பகிர்ந்துள்ளனர். அவருடைய முக்கிய திரைப்படங்களின் காட்சிகள், பாடல்கள்கூட ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.
நடிகர் தனுஷ்
,மூன்று விநாடி காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பதாக தனுஷ் குறித்து நயன்தாரா தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னும் தனுஷிடமிருந்து தடையில்லா சான்று பெற முடியாததாலும், ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பாடல்கள், காட்சிகள், புகைப்படங்களைக்கூட பயன்படுத்த அனுமதி தராத காரணத்தாலும், ஆவணப்படத்தை மீண்டும் படத்தொகுப்பு செய்து, தற்போதுள்ள வடிவத்திற்குக் கொண்டு வந்திருப்பதாக நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தின் பாடல் வரிகளைக்கூட பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படாதது, தன் இதயத்தை நொறுக்குவதாக நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
“படப்பிடிப்பில் இருப்பவர்களின் சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவரா தயாரிப்பாளர்?” என்றும் நயன்தாரா கேள்வியெழுப்பியுள்ளார்.
அதோடு, “தனுஷின் நோட்டீஸுக்கு சட்ட ரீதியாக பதிலளிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சக நடிகைகள் ஆதரவு
நயன்தாராவின் இந்த அறிக்கை வெளியான உடனேயே, அனுபமா பரமேஸ்வரன், அஞ்சு குரியன், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட மற்ற நடிகைகள் சிலரும் நயன்தாராவின் பதிவுக்கு ‘லைக்’ செய்துள்ளனர்.
குறிப்பாக, நடிகை பார்வதி அந்த அறிக்கையைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
“தொழில் மற்றும் பணரீதியாக இல்லாமல், தனிப்பட்ட ரீதியில் தனுஷ் இதைச் செய்திருப்பதாக” நயன்தாரா அந்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, ஆடியோ வெளியீட்டு விழாவொன்றில் தனுஷ் பேசிய வீடியோவை பகிர்ந்து ‘வாழுங்க, வாழ விடுங்க’ என தனுஷ் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா
10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘நானும் ரௌடிதான்’ வெற்றி திரைப்படமாக அமைந்தது
கடந்த 2015ஆம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ நயன்தாராவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு இது இரண்டாவது படம்.
விஜய் சேதுபதி, ராதிகா, பார்த்திபன், ஆனந்தராஜ். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோரின் கூட்டணியில் நகைச்சுவை திரைப்படமாகப் பல விதங்களில் புதுமையான அனுபவத்தைத் தந்ததாக அச்சமயத்தில் திரைப்பட விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
கடந்த 2016இல் சிறந்த தமிழ் நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது நயன்தாராவுக்கு இந்தப் படத்திற்காக வழங்கப்பட்டது.
விருது மேடையில் பேசிய நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், அனிருத் உள்ளிட்ட மொத்த படக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்திருப்பார்.
தனுஷ் குறித்துப் பேசியபோது, “இந்தப் படத்தில் தனுஷ் என் நடிப்பை வெகுவாக வெறுத்தார். அதற்காக தனுஷிடம் மன்னிப்பு கேட்கிறேன்” எனக் கூறியிருந்தார். அதைக் கேட்டு தனுஷும் சிரிப்பார். இந்தக் காணொளி அச்சமயத்தில் வெகு பிரபலமானதாக இருந்தது.
தனுஷ் தரப்பு கூறியது என்ன?
நயன்தாரா தரப்புக்கு தனுஷ் தரப்பில் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவருடைய வழக்கறிஞர் அருண் அனுப்பிய நோட்டீஸை, நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
(மூன்று பக்க நோட்டீஸையும் முன்பு பகிர்ந்திருந்த விக்னேஷ் சிவன், பின்னர் மற்ற இரண்டு பக்கங்களையும் நீக்கிவிட்டு, 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட பகுதியை மட்டும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.)
அதன்படி, அந்த நோட்டீஸில் தனுஷின் வழக்கறிஞர், “படப்பிடிப்பின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், போட்டோ-ஷூட்கள், வீடியோக்கள் மற்றும் படத்தை விளம்பரப்படுத்த எடுக்கப்படும் வீடியோக்கள் ஆகியவற்றை ஊடகங்கள் உள்ளிட்ட எந்தத் தளங்களிலும் பயன்படுத்தும் உரிமை படத் தயாரிப்பாளருக்கே உள்ளதாக” கூறப்பட்டுள்ளது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன
இருவருடைய காதல், திருமணம் உள்ளிட்ட பகுதிகள் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளன
“நானும் ரௌடிதான் திரைப்படத்திற்கான பதிப்புரிமை (copyright) உரிமையாளர் வண்டர்பார் தயாரிப்பு நிறுவனம்தான் (Wunderbar) என்பதை நயன்தாரா தரப்பு மறுக்கவில்லை என்பதே, என் வாடிக்கையாளர்தான் (தனுஷ்) படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளுக்கும் உரிமையாளர் என்பதை நிறுவப் போதுமானது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என் வாடிக்கையாளரால் பணியமர்த்தப்பட்ட ஒருவரால் (work on hire – வேலையைச் செய்பவருக்கு அல்லாமல் அதன் உரிமையாளருக்கே சொந்தமானவை) எடுக்கப்பட்டது. கடந்த 22.10.2015 அன்று வண்டர்பார் ஃபிலிம்ஸ் எனும் என் வாடிக்கையாளரின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வீடியோக்கள் என் வாடிக்கையாளரின் யூடியூப் சேனலில் இருப்பதை 10 ஆண்டுகளாக அறியவில்லை என்பதை அவர் (நயன்தாரா) மறுக்க முடியாது. இதன்மூலம் நயன்தாரா ‘நெட்பிளிக்ஸ் இந்தியா’ நிறுவனத்தைத் தவறாக வழிநடத்த முயல்வதாக” அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தனது வாடிக்கையாளரான தனுஷ்தான் படத்துடன் சம்மந்தப்பட்ட அனைத்திற்கும் பிரத்யேக உரிமையாளர் எனவும் தனுஷின் வழக்கறிஞர் நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
“படப்பிடிப்பின்போது வீடியோ எடுப்பதற்காக என் வாடிக்கையாளர் யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை என எதிர்த்தரப்பு கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகள் அதை எடுத்தவருக்குத்தான் சொந்தமானது எனக் கூறுவது மிக மேலோட்டமானதாக உள்ளது. அவையும் தயாரிப்பாளருக்கே சொந்தம்” என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அந்தக் காட்சிகளை 24 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட ஈடு கோரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் கூறுவது என்ன?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பதிப்புரிமை சட்டம் 1957 குறித்து விளக்கினார்.
“இலக்கியம், கலை படைப்புகளுக்கு வழங்கக்கூடியதுதான் பதிப்புரிமை (copyright). புத்தகம், இசை, காட்சி சம்பந்தப்பட்டவற்றுக்கு வெவ்வேறு வித பதிப்புரிமைகள் வழங்கப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தாலும் சட்டப்படி அதற்கான உரிமை தயாரிப்பாளருக்குத்தான் இருக்கும்,” என்றார்.
நயன்தாரா / விக்னேஷ் சிவன்
“வெளிநாடுகளில் ஒரு படத்தை ஒவ்வொருமுறை ஒளிபரப்பும்போதும் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது சதவீத பணத்தை அதில் பங்கெடுத்த முக்கியக் கதாபாத்திரங்களுக்கு வழங்கும் அளவுக்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால், இந்தியாவில் அந்தளவுக்கு இந்தச் சட்டங்கள் வளரவில்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.
இருந்தாலும், தற்போது சினிமாவை பொறுத்தவரை எல்லோரும் தெளிவாக அனைத்து தளங்களுக்குமான பதிப்புரிமையை தயாரிப்பாளர் ஒப்பந்தமாக ஏற்படுத்திக் கொள்வதாக அவர் குறிப்பிடுகிறார்.
அந்த வகையில் ‘நானும் ரௌடிதான்’ சம்மந்தப்பட்ட அனைத்து உரிமைகளும் அதன் தயாரிப்பாளரான தனுஷுக்கு இருக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
ஆனால், இந்தச் சட்டத்தில் சில விதிவிலக்குகள் (fair use) உள்ளன. “இலக்கியம், ஆராய்ச்சி சார்ந்தவற்றுக்குப் பாடல்களையோ, காட்சிகளையோ 30 விநாடிகள் வரை அவர்களின் அனுமதியோ ஒப்புதலோ இல்லாமலேயே குறிப்பிட்ட அளவு பயன்படுத்தலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், அதையே வணிகரீதியாகப் பயன்படுத்தினால் விதிமீறலாகிவிடும்” என்கிறார் அவர்.
தற்போது எழுந்துள்ள விவகாரத்தில், 3 விநாடி காட்சி ஆராய்ச்சி நோக்கில் பயன்படுத்தப்பட்டதா, என்பது தெளிவாகவில்லை எனக் குறிப்பிடும் வெற்றிச்செல்வன், ஒருவேளை தன்னைப் பற்றிய ஆவணப்படம் எனும் நோக்கில்கூட நயன்தாரா தனது தரப்பு வாதங்களாக முன்வைக்க முடியும் என்கிறார்.
மேலும், 3 விநாடிகள் எனக் குறுகிய காலமே பயன்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டலாம் என்கிறார்.