ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள் : இரண்டு நீதிகள்!
எந்த ஆதாரமும் இல்லாமலேயே "பயங்கரவாதி" என்ற முத்திரை குத்தி சிறையில் அடைத்தது,

ஒன்பது மாதங்களாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றமற்றவனாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஹைல் என்ற இளைஞர், சமீபத்தில் நீதிமன்றத்தால் எந்தவித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது எந்த ஆதாரமும் இல்லாமலேயே "பயங்கரவாதி" என்ற முத்திரை குத்தி சிறையில் அடைத்தது, இந்தச் சட்டம் எவ்வாறு இன அடிப்படையிலான அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
மற்றொரு பக்கம், முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, பொதுமக்களின் உயிர்களோடு விளையாடும் அளவுக்கு போலி மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அந்த மருந்துகளில் "பக்டீரியா மற்றும் வெறும் நீர்" இருந்ததாக வெளிப்படையாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர் மீது பயங்கரவாதச் சட்டம் அல்ல, சாதாரண குற்றவியல் சட்டமே பயன்படுத்தப்பட்டு, இறுதியில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இங்கே முக்கியமான கேள்வி எழுகிறது:
போலி மருந்துகளால் எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள் என்பதை இன்று வரை யாரும் கணக்கிட முடியவில்லை.
மக்கள் உயிர்களோடு நேரடியாக விளையாடிய இத்தகைய செயல் பயங்கரவாதச் செயல் அல்லவா?
ஏன் ரம்புக்வெல்ல மீது பயங்கரவாதச் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை?
இதே குற்றச்சாட்டில் ஒரு தமிழ் அமைச்சர் அல்லது ஒரு முஸ்லிம் அமைச்சர் சிக்கியிருந்தால், அவர் மீது உடனடியாக பயங்கரவாதச் சட்டம் கையாண்டு சிறையில் அடைத்திருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
சட்டத்தின் இரட்டை முகம்
இது புதிதான ஒன்று அல்ல. இலங்கையில் சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளுக்கு சட்டம் வேறுபடுகிறது; தமிழர், முஸ்லிம் ஆகியோருக்கு சட்டம் முற்றிலும் வேறு விதமாக செயல்படுகிறது.
முன்னாள் அமைச்சர் பிள்ளையான் மீது பயங்கரவாதச் சட்டத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்தது அனைவருக்கும் தெரிந்த சம்பவம்.
அதே சமயம், பொதுமக்களின் உயிர்களை கேள்விக்குறியாக்கிய ரம்புக்வெல்ல பிணையில் வெளியே நடமாடுகிறார்.
இதுவே இரண்டு நீதிகள் – இரண்டு சட்டங்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.
அரசியல் விளக்கம்.
பயங்கரவாதச் தடைச் சட்டம் ஆரம்பத்தில் "பயங்கரவாதத்தை தடுப்பதற்காக" கொண்டுவரப்பட்டது. ஆனால் நடைமுறையில் அது:
தமிழர்களையும் முஸ்லிம்களையும் மௌனப்படுத்தும் கருவி
அரசியல் எதிரிகளைச் சிதைக்கும் ஆயுதம்
இன அடிப்படையிலான பாகுபாடு
எனப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் சிக்குபவர்கள் பெரும்பாலும் சிறுபான்மை சமூகத்தினர். ஆனால் சிங்கள அரசியல்வாதிகளுக்கு சட்டம் மென்மையாக செயல்படுகிறது. இது இலங்கையின் நீதித்துறை சார்பின்மையை வெளிப்படுத்துகிறது.
இன்று எழும் கேள்வி ஒன்றே:
சுஹைல் குற்றமற்றவனாகவும், பல மாதங்கள் "பயங்கரவாதி" எனக் குற்றம்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட முடிகிறது.
ஆனால் ரம்புக்வெல்ல, மக்கள் உயிர்களை கேள்விக்குறியாக்கும் போலி மருந்துகளை இறக்குமதி செய்த போதும், சுதந்திரமாக பிணையில் வெளிவந்துவிடுகிறார்.
இது ஒரே நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் செயல்படுகின்றன என்பதற்கான உயிருடன் இருக்கும் சான்று.
சிங்கள பேரினவாதிகளுக்கு ஒரு சட்டம்
தமிழர், முஸ்லிம்களுக்கு மற்றொரு சட்டம்
இது தான் இலங்கையின் "நீதியின் முகம்."
ஈழத்து நிலவன்.