மஹிந்த யுத்தத்துக்கு தலைமை தாங்கியதை போன்று நாடு வங்குரோத்து நிலையடைவதற்கும் தலைமை தாங்கினார்! - அரச தரப்பு எம்.பி. பகிரங்கம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இல்லாதொழித்தவர்கள் தான் இன்று ஜனாதிபதி உரித்துரிமைகளை நீக்கும் சட்டத்துக்கு எதிராக பேசுகிறார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்ஷ நாடு வங்குரோத்து நிலையடைவதற்கும் தலைமை தாங்கினார் என்பதை நாட்டு மக்கள் மறக்க போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இல்லாதொழித்தவர்கள் தான் இன்று ஜனாதிபதி உரித்துரிமைகளை நீக்கும் சட்டத்துக்கு எதிராக பேசுகிறார்கள். இந்த சட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு காணப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிபால ஆகியோர் அரச உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் ஆதரவாளர்களை அழைத்து ஊடக கண்காட்சி நடத்தவில்லை.
ஏனெனில் அவர்களுக்கு எதிர்கால அரசியலுக்கான எவ்வித தேவையும் கிடையாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாமல் ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுனவினர் அரசியல் வெற்றிக்கான ஒரு நாமமாகவே கருதுகிறார்கள்.
தனது தந்தைக்காக விஜேராம இல்லத்துக்கு ஆட்களை கொண்டு வந்த நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. நாட்டு மக்களை போலியாகவே ஏமாற்றுகிறார்கள்.
இயற்றப்பட்ட இந்த சட்டம் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்காலத்தில் செல்லுபடியாகும். ஆகவே இது அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது முறையற்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்துக்கு தலைமை தாங்கினார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் யுத்த வெற்றியை குறிப்பிட்டுக் கொண்டு மக்களின் வரிப்பணத்தின் ஊடாக முழு குடும்பத்தையும் வளப்படுத்திக்கொள்ள முயற்சிப்பது எந்தளவுக்கு நியாயமானது.
இவர் யுத்தத்துக்கு தலைமை தாங்கியதை போன்று நாடு வங்குரோத்து நிலையடைவதற்கும் தலைமை தாங்கினார் என்பதை நாட்டு மக்கள் மறக்க போவதில்லை என்றார்.