நாட்டில் 130 வைத்தியசாலைகளுக்கு அருகில் அரச மருந்தகங்களை அமைக்கும் திட்டம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
,

நாட்டில் 130 வைத்தியசாலைகளுக்கு அருகில் அரச மருந்தகங்களை அமைக்கும் திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதன்படி நாட்டிலுள்ள 130 இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளை உள்ளடக்கியும், பிரபல தனியார் வைத்தியசாலைகளுக்கு அருகிலும் அரச மருந்தகங்களை அமைக்கும் திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் நேற்று (27) அரசு மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 65வது மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
பொதுமக்களுக்கு நியாயமான விலையில் உயர்தர மருந்துகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.
இந்த மருந்துகள் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி அரசு மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தர ஆய்வகத்தில் ஏழு முறை பரிசோதிக்கப்பட்ட பின்னரே சந்தைக்கு விடுவிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் நம்பிக்கையுடன் மருந்துகளைப் பெறலாம் என்றும் கூறினார்.
2024ஆம் ஆண்டு முழுவதும் 68 டெண்டர்கள் மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 268 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்மூலம் கொள்முதல் செயல்முறை குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு அரச வைத்தியசாலைகளுக்கு உயர்தர மருந்துகள் முறையாக வழங்கப்படும் என்றார்.
மேலும் அரசாங்கங்களுக்கு இடையே மருந்து கொள்முதல் தொடர்பான விசேட திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.