வாசலிலே கிருசாந்தி!
கிருசாந்தியின் ஆத்மாவாக எங்களின் நீதி கேட்கும் பொறிமுறைக்கு எம்மை வழி நடத்துகிறது!
இப்புத்தகத்திற்கு ஏன் வாசலிலே கிருசாந்தி என பெயர் வந்தது? கிருசாந்தி உயிருடன் இல்லை, ஆனால் அவரது ஆத்மா அவரது குரல் இன்றும் நீதி கேட்டு வாசலிலே நிற்கிறது. இப்புத்தக அறிமுகத்திற்கு செல்ல முன்னர் இப்புத்தகம் தோன்றியமைக்கு ஓர் காரணம் உண்டு. அதனைச் சற்று எட்டிப்பார்த்து விட்டு வர எண்ணுகிறேன். நம் அனைவருக்கும் தெரியும் "கிருசாந்தி குமாரசுவாமி" யின் பாலியல் பலாத்காரத்தினூடான படுகொலை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்ச நஞ்சமல்ல, இன்று வரை அவ் அதிர்வலைகள் தொடர்கிறது. அது கிருசாந்தியின் ஆத்மாவாக எங்களின் நீதி கேட்கும் பொறிமுறைக்கு எம்மை வழி நடத்துகிறது என்பதில் எனக்கு துளியளவும் ஐயமில்லை.
கிருசாந்தி ஒன்றும் சாதாரண குடிமகளாக இராணுவத்தினரின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகவில்லை. தனது நண்பி இராணுவத்தினரின் வாகனத்தால் வேண்டுமென்றே மோதிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தங்களது வழமையான இராணுவத் தடுப்புக் காவலைத் தாண்டும் போது இராணுவத்தினருடன் முரண்பட்டுச் சண்டையிடுகிறார், அதன் பின் வீடு செல்கிறார். இவ்வாறு கோபமாகப் பேசியது தான் அவருடைய இந்நிலைக்குக் காரணமாகிறது. அன்று தன்னுடைய நண்பியின் இறப்புக்கு நீதி கேட்டுத் தான் கிருசாந்தி இத்தனை கொடுமைகளை அனுபவித்து இறந்திருக்கிறார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கிருசாந்தியின் அம்மா, தம்பி, அயலவர் என மூவர் தொடர்ச்சியாக கொல்லப்படுகிறார்கள். இதன் பிற்பாடு கிருசாந்தி தான் புதைக்கப்பட்ட இடத்தை நாம் தேடி வர வேண்டும் என வழி காட்டிக் கொண்டே இருந்தார். அந்த வழிகாட்டுதல் அவருடைய தம்பியின் சைக்கிளின் உதிரிப்பபாகத்தை ஒருவர் ஓர் கடையில் அடையாளம் காண்கிறார். அது ஓர் ஆர்மிகாரரால் விற்கப்பட்டது என அறிகிறார். அதன் பிற்பாடு இவ்விசாரணை பல கோணங்களில் சென்று கிருசாந்தி எங்கே புதைக்கப்பட்டார் எனத் தோண்டியெடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொழும்பில் மிக மிக அவசரமாக 20 ,30 நிமிடங்களில் அவர்களுக்கான இறுதிக் கிரியைகள் செய்து முடிக்கப்படுகிறது. கிருசாந்தி புதைக்கப்பட்ட இடத்தில் அவர் தன்னைத் தோண்டியெடுப்பதற்கான வேலைகளை மட்டும் செய்யவில்லை, தன்னோடு சேர்த்து அங்கே 600 இற்கும் மேற்பட்ட உறவுகள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை வெளிக் கொணர்ந்தார்.
கிருசாந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சோமரத்ன ராஜபக்ச இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அன்று தொடக்கம் அது தோண்டப்பட்டது. 19 என்புக்கூடுகள் வரை கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஓர் கட்டட வேலைக்காக மீண்டும் தோண்டும் போது 200 இற்கும் மேற்பட்ட எம்முடைய உறவுகளின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் கிருசாந்தி பேசுபொருளாக்கப்படிருக்கிறார். கிருசாந்தியினுடைய பெயரை நாம் தினம் தினம் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். செம்மணியிலே தொடர்ச்சியாக கிருசாந்தி எமக்காக நீதி கேட்டுப் போராடுகிறார். கிருசாந்தியினுடைய மரணம் அவரது கொலை எங்களுக்குச் சாட்சியாக மாறி இருக்கிறது. எத்தனையோ பேர் புதைக்கப்பட்டாலும் புதையுண்ட இடத்திலிருந்து விருட்சமாக எழுந்து நின்று நீதியைக் கேட்டவர் கிருசாந்தி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
"வாசலிலே கிருசாந்தி" எழுநாவினால் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் முன்னுரையை நிலாந்தன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். புத்தகத்தின் உள்ளே ஈழத்தைச் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்களின் 50 இற்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன.
இப்புத்தகம் வெறுமனே எம்மைத் துன்பப்படுத்தவோ, கிருசாந்தியின் நினைவுகளை மீட்டிக் கொள்வதற்காகவோ, கிருசாந்தியின் சொந்தங்களைக் கவலைப்படுத்தவோ அல்ல, மாறாக கிருசாந்தி போன்று புதைக்கப்பட்ட அனைவருக்குமான நீதிக் கோரிக்கைகள் இன்னும் சாகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டத்தான் எம் கைகளில் இருக்கிறது. இப்புத்தகத்தினை அச்சிட்டு இதனை மீண்டும் பேசுபொருளாக்கி அனைவரது மனதிலும் அவ் எழுச்சியை அப்படியே குடி கொள்ள வைத்து நீதி கேட்கின்ற போராட்டத்திற்கு நாம் உறுதுணையாய் நிற்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுப்பதற்கு துணையாய் நின்ற வெளியீட்டுதாரர்களுக்கும், இப்புத்தகத்தில் நிகழ்ந்த சம்பவங்களை எழுச்சியுடன் ஆழமாக விவரித்த எழுத்தாளர்களுக்கும் எம் நன்றிகள்.
இப்புத்தகம் அனைவரது கைகளிலும் இருக்க வேண்டும். இப்புத்தகம் எம் அறிவுக்கண்ணைத் திறக்க மட்டுமல்ல அரசியல் ஞானத்தைத் திறக்க உருவாக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் ஏன் வாசலிலே கிருசாந்தி நிற்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். மறைந்தாலும் நீதிக்காகப் போராடும் அந்த இதய தெய்வத்தை நாம் நினைவு கொள்ள வேண்டும்.
எம் படைப்புகள் மூலமாக கலை பண்பாட்டுத் தளங்களில் இயங்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது என்பதை இப்புத்தகம் எமக்கு உணர்த்தி இருக்கிறது. இவ்வெழுத்துக்கள் மிகவும் ஆழமானவை. நீங்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். கிருசாந்திக்கு நிகழ்ந்தவை இனியும் நிகழாமல் இருக்கவும் நிகழ்ந்தவற்றிற்கு நீதி கேட்கவும் இது ஏதோ ஓர் வகையில் எமக்கு அடித்தளமாக அமைகிறது. எம் போராட்டம் தொடர்ந்து செல்ல வேண்டும். நீதி கேட்கும் பொறிமுறையில் நாம் வெல்ல வேண்டும். இறந்த ஆத்மாக்களுக்கு நாம் செய்ய வேண்டிய மாபெரும் கடமையாக நான் இதனைப் பார்க்கிறேன்.
-சுவர்ணலதா


