சிவாஜிலிங்கத்தின் மனைவியிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்நீண்ட நேரம் விசாரணை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதா எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று, பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (TID) விசாரணைகளை முன்னெடுத்துள்ளமைக்கு தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்குச் சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். விசாரணையின் பின்னர், எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் சிவாஜிலிங்கம் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை (Summons) வழங்கிச் சென்றுள்ளனர்.

சட்டத்தரணி என்ற ரீதியில் சிவாஜிலிங்கத்தின் குடும்பத்தினரால் இத்தகவல்கள் தமக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக என். சிறிகாந்தா குறிப்பிட்டுள்ளார். 
“சிவாஜிலிங்கம் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், அவரது குடும்பத்தினரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் வகையிலும், அவர்களுக்கு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் நோக்கிலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.