மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை! அதிகாரிகள் அறிவுறுத்தியதால் மேலும் சிக்கல்!!

அரச ஆதரவைப் பெற்ற குடியேற்றவாசிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் மேய்ச்சல் காணிகளை பாதுகாத்துத் தருமாறு கோரி, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு சாதகமான தீர்வை வழங்குவதில் அரசாங்கம் மேலும் காலம் தாழ்த்தி வருவதனால், சிங்கள விவசாயிகள் பயிர் இழப்பீடுகளை செலுத்த நேரிடுவதால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

மயிலத்தமடு – மாதவனைப் பகுதியைச் சேர்ந்த பால் பண்ணையாளர்களுக்காக 1,500 ஏக்கருக்கும் அதிகமான மேய்ச்சல் நிலங்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் கடந்த மே மாதம் மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட உத்தரவை அதிகார சபை இதுவரை நடைமுறைப்படுத்தாமையினால் கரடியனாறு பொலிஸாரும் மாவட்டச் செயலாளரும் பால் பண்ணையாளர்களிடம், மேய்ச்சல் நிலங்களுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியை பசு மாடுகளை மேய்ப்பதற்காக தற்காலிகமாக பயன்படுத்துமாறு அறிவித்துள்ளனர்.

குறித்த காட்டுப் பகுதியை இராணுவத்தினர் தங்களது பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தி வருவதால், அப்பகுதியில் மேய்வதற்கு பசு மாடுகள் அஞ்சுவதாக மயிலத்தமடு – மாதவனை பால் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனித்தம்பி நிமலன் தெரிவித்துள்ளார்.

புல் மேய்வதற்காக பசு மாடுகளை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்வது, மயிலத்தமடு – மாதவனை பால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என தெரிவித்த பிரதேச பால் பண்ணையாளரான கந்தப்பு யோகலிங்கம்,  தமது பசு மாடுகள் விவசாய நிலங்களுக்குச் சேதம் விளைவித்ததாகச் சிங்கள விவசாயிகள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், தாம் பயிர்ச் சேதத்திற்கான இழப்பீட்டை கூடச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிங்கள விவசாயிகள் என்னுடைய மாடுகளை பிடித்து வைத்துக்கொண்டு பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர். நேற்று (நவம்பர் 8) பொலிஸுக்கு அழைத்து விசாரித்தார்கள். இன்று மீண்டும் பொலிஸுக்கு வரச்சொன்னார்கள். நான் சென்றபோது மாடு விவசாய செய்கையை சேதமாக்கியதால் அதற்கு நட்டஈடாக 35,000 தர வேண்டுமென பொலிஸார் குறிப்பிட்டனர். என்னிடம் அவ்வளவு பணம் இல்லையென்று இறுதியில் 12,000 ரூபாய் தருவதற்கு இணக்கம் தெரிவித்துவிட்டு வந்தேன். என்னுடைய 10-15  மாடுகளை அவர்கள் கட்டி வைத்திருந்தார்கள். ஒரு பசுவையும் கன்றுகுட்டியையும் தவிர ஏனைய மாடுகள் திரும்பியுள்ளன. அதனை அவிழ்த்துவிட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் இதுவரை அவை திரும்பவில்லை.”

“இதற்கு யார் பொறுப்புக் கூறுவது? பொலிஸாரும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை மாத்திரமே அச்சுறுத்துகின்றனர். இழப்பீடு வழங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர்” என பால் பண்ணையாளர் கந்தப்பு யோகலிங்கம் ஊடகவியலாளர்கள் முன்னில்லையில் மேலும் தெரிவித்துள்ளார்.

தமது மாடுகளின் மேய்ச்சலுக்காக பிரதேச காணி அதிகாரியும் பொலிஸாரும் பரிந்துரைத்துள்ள வனப்பகுதியில் உள்ள யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளாலும் தமது கால்நடைகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக மயிலத்தமடு – மாதவனை பால் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனித்தம்பி நிர்மலன் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தக் காடுகளில் யானைகள், புலிகள் போன்ற விலங்குகளும் இருக்கின்றன. அந்த விலங்குகளால் எமது மாடுகளின் உயிருக்கும் அபத்து இருக்கின்றது. காடுகளிலும் புற்கள் குறைவாகவே இருக்கின்றன. மாடுகளுக்கு சாப்பிடுவதற்கு போதுமான உணவு இல்லை. ஆனால், மாவட்ட செயலாளர், பொலிஸார் உள்ளிட்ட அனைவரும் எங்களிடம் காட்டுக்குச் சென்று மாடுகளை மேய்க்குமாறே கூறுகின்றனர். எங்களுக்கு சட்டரீதியான மேய்ச்சல் நிலங்கள் வழங்கப்படும் வரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடையாது. இதற்கிடையில், காட்டுப் பகுதிக்குள் இராணுவத்தினரும் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இராணுவ வீரர்களைக் கண்டதும் எமது மாடுகள் பயந்து பதற்றமடைந்து ஓடுகின்றன.”

தமது மாடுகளுக்கு மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தி வந்த 7,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், செழிப்பாகப் புல் வளரும் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பகுதியை சிங்கள விவசாயிகள் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளதா, மயிலத்தமடு – மாதவனை பால் பண்ணையாளர்கள், கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.

2026ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மயிலத்தமடு – மாதவனை பால் பண்ணையாளர்களுக்காக 1,570 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டிருந்தார். எனினும், அந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மயிலத்தமடு – மாதவனை பாரம்பரிய பால் பண்ணையாளர்கள், பல ஆண்டுகளாகத் தமது கால்நடைகளை மேய்ப்பதற்காக 7,700 ஏக்கருக்கும் அதிகமான மேய்ச்சல் நிலப் பகுதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலப்பரப்பில் சுமார் 4,000 ஏக்கர் காணிகளுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையும் வனப் பாதுகாப்புத் திணைக்களமும் உரிமை கோரி வருவதுடன், எஞ்சியுள்ள 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை மேய்ச்சல் நிலங்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் மிக விரைவில் பிரகடனப்படுத்துமாறு பால் பண்ணையாளர்களின் கோரிக்கை விடுக்கினறனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்னால் தமிழ் பால் பண்ணையாளர்கள் முதன்முறையாக போராட்டத்தை ஆரம்பித்திருந்திருந்தனர். இந்த போராட்டமானது 2023 செப்டெம்பர் 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குழுக் கூட்டத்தில், பால் பண்ணையாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்கத் தன்னால் முடியாது என மாவட்டச் செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.