30 ஆண்டுகால சர்ச்சை! சொத்து உரிமையாளர்களிடம் கட்டடத்தை ஒப்படைக்க இணக்கம்
30 ஆண்டுகால சர்ச்சை; 18 மாதங்களில் ஸ்ரீதர் திரையரங்கக் கட்டடத்திலிருந்து வெளியேறுகிறார் டக்ளஸ் தேவானந்தா!
சொத்து உரிமையாளர்களிடம் கட்டடத்தை ஒப்படைக்க இணக்கம் – யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் இணக்கப்பாடு.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஸ்ரீதர் திரையரங்கக் கட்டடம் உள்ளிட்ட தனியார் ஆதனத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தனியார் ஆதனத்தைத் தாம் அடாத்தாக ஆக்கிரமித்து வைத்திருந்ததாக டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டதுடன், அதனை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டடத் தொகுதி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது கட்சியின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சொத்தின் உரிமையாளர்களான விஜிதா தியாகராஜா உள்ளிட்டோர் தமது ஆதனத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டகாலமாகப் போராடி வந்ததுடன், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்ற விசாரணையின்போது, குறித்த சொத்து அதன் உரிமையாளர்களுக்கே சொந்தமானது என்பதை டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆரம்பத்தில் மூன்று வருட கால அவகாசம் கோரியிருந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைய 18 மாதங்களுக்குள் கட்டடத்தைக் காலி செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த ஸ்ரீதர் திரையரங்க ஆதன உரிமைச் சர்ச்சையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாகத் தமது சொத்தை மீளப் பெறுவதற்காகப் போராடிய உரிமையாளர்களுக்கு இந்த இணக்கப்பாடு ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.