ரஷ்யாவுடன் நேரடியாகப் பேசுவதும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு அவசியம் - பிரித்தானியா
உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் இராணுவத் தொடர்புகளைத் துண்டித்திருந்த பிரித்தானியா, தற்போது அவற்றை மீண்டும் ஏற்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையே தவறான இராணுவக் கணிப்புகளால் எதிர்பாராத நேரடி மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் எனப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் "Dagens Næringsliv" பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், தற்போதைய பதற்றமான சூழலில் இரு நாடுகளின் இராணுவத் தலைமைகளுக்கிடையே நேரடித் தொடர்புகள் இருப்பது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பின்னர் இரு நாடுகளின் உயர்மட்ட இராணுவத் தொடர்புகள் பெருமளவில் முடங்கியிருந்தன.
இந்நிலையில், பிரித்தானியாவின் புதிய அணுகுமுறைக்கு ரஷ்யாவும் சாதகமான பதிலை வழங்கியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகாரோவா, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் தனது ரஷ்யத் தரப்பினரைத் தொடர்புகொண்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஆதரித்து வரும் பிரித்தானியா, தற்போது மொஸ்கோவுடன் நேரடி இராணுவத் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த முயல்வது குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வாகும்.
இது ரஷ்யாவுக்கு ஆதரவான கொள்கை மாற்றம் என்று உடனடியாகக் கருத முடியாது என்றாலும், மாறாக, ரஷ்யாவுடனான பதற்றம் கட்டுப்பாட்டை மீறி நேரடி மோதலாக மாறுவதைத் தடுக்கும் பாதுகாப்பு முயற்சியாகப் பார்க்கலாம். அதேவேளை, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்படும் சூழலில், பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யாவை இராணுவ ரீதியாக எதிர்கொள்வது என்பதை தாண்டி, அதனுடன் நேரடியாகப் பேசுவதும் ஐரோப்பிய பாதுகாப்புக்கு அவசியம் என்ற யதார்த்தத்தைப் பிரித்தானியா ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளதா என்ற கேள்வியையும் இந்த நகர்வு எழுப்புகிறது.