தான் உள்ளுக்குள் உடைந்து போயிருப்பதாகவும், அடிக்கடி பயங்கரமான கனவுகள் வருவதாகவும், பசியின்மை, குற்ற உணர்ச்சி மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் சலே தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான சுரேஷ் சலேக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை உடனடியாக வழங்குமாறு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் (Free Lawyers Association) அதிகாரிகளை திங்கட்கிழமை (08) வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சல்லே மற்றும் ஏனைய கைதிகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதற்கு வழிவகுக்கும் தற்போதைய சட்டங்களை மாற்றியமைக்குமாறும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பாளர் மைத்ரி குணரத்ன மற்றும் முதன்மை நிறைவேற்று அதிகாரி ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “அதிகாரிகளால் சல்லேவுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் அலைக்கழிப்புகள் குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் வருத்தமும் அடைகிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“கடந்த இரண்டு மாதங்களில் சுரேஷ் சல்லே 6 முதல் 7 கிலோ கிராம் வரை உடல் எடையை இழந்துள்ளார். அத்துடன் அவர் ‘இன்டர்டிரிகினஸ் டெர்மடைடிஸ்’ (Intertriginous Dermatitis - மடிப்புகளில் ஏற்படும் தோல் அழற்சி), வைட்டமின்-டி (Vitamin D) குறைபாடு உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுகள், இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் (Cholesterol) அளவு அதிகரிப்பு மற்றும் ஏற்கனவே இருந்த ஒற்றைத்தலைவலி (Migraine) தீவிரமடைதல் போன்ற பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், அவர் கடுமையான மனச்சோர்வு, கடுமையான பதற்றம் மற்றும் ‘அதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தக் கோளாறு’ (PTSD) ஆகியவற்றினாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. தடயவியல் மனநல மருத்துவ அறிக்கையின்படி, இவறான அறிகுறிகள் ஒரு நபர் கடுமையான சித்திரவதை அல்லது மோசமான நடத்தைகளுக்கு ஆளாகும்போது தோன்றுபவை என்றும், இதனால் அவருக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுவதற்கான அதிக ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தான் உள்ளுக்குள் உடைந்து போயிருப்பதாகவும், அடிக்கடி பயங்கரமான கனவுகள் வருவதாகவும், பசியின்மை, குற்ற உணர்ச்சி மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் சலே தெரிவித்துள்ளார்.”
அவசர சிகிச்சைக்கான தேவை
அவருக்கு வெளியில் தெரியக்கூடிய கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்றும், நீதிமன்றத்தில் முன்னிலையாகி விசாரணைகளை எதிர்கொள்ளும் உடல் தகுதியுடன் அவர் இருக்கிறார் என்றும் மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்திய போதிலும், பாதுகாப்பானதொரு மருத்துவச் சூழலில் அவருக்குப் பன்முகப்படுத்தப்பட்ட விரிவான உடல் மற்றும் மனநலச் சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
கைதிகள் அனைவரும் சமமாகவே நடத்தப்படுவதாகப் பொலிஸார் கூறிவந்த போதிலும், இந்த மருத்துவக் கண்டுபிடிப்புகளானது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எதிர்கொள்ளும் கடுமையான புறக்கணிப்புகளையும் மோசமான நிலைமைகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.
இச்சட்டத்தின் விதிகளானது, முறையான நீதிமன்றக் கண்காணிப்போ அல்லது முறையான குற்றச்சாட்டுகளோ இன்றி, ஒரு வருடத்திற்கும் மேலாகத் தன்னிச்சையாகத் தடுப்புக்காவலில் வைக்க அதிகாரிகளுக்கு இடமளிக்கிறது. சலே போன்ற ஒரு முக்கிய நபரின் வழக்கே இவ்வாறான நிலைமையைத் தோற்றுவித்துள்ள போது, வெளியில் தெரியாமல் நீதிமன்றக் கண்காணிப்புக்கு அப்பால் இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல சாதாரணக் கைதிகளின் அவல நிலையை இது பிரதிபலிக்கிறது.
சர்வதேசப் பொறுப்புக்கூறல்
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்கான துணைக் குழுவின் (UN SPT) இலங்கை வருகை நெருங்கியுள்ள வேளையில், எழுந்துள்ள இந்தச் சூழ்நிலையானது, சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் (OPCAT) விருப்பத்திற்குரிய நெறிமுறைகளின் கீழ் இலங்கை கொண்டுள்ள சர்வதேசக் கடப்பாடுகளைச் சரியாக நிறைவேற்றுகிறதா என்ற பலத்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
எனவே, சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் அதிகாரிகளிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
சுரேஷ் சல்லே மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கைதிகளுக்கும் முறையான மருத்துவச் சூழலில் சுயாதீனமான, விரிவான உடல் மற்றும் மனநலச் சிகிச்சைகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
கைதிகளை அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் வழக்கமாகச் சந்திப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் எவ்வித தாமதமுமின்றி தகுதியுள்ள நீதிமன்ற அதிகாரிகள் முன் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்; அல்லது அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க, அனைத்துத் தடுப்புக்காவல் மையங்களிலும் சித்திரவதை, முறையற்ற நடாத்துகை மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல்களுக்கு எதிரான அடிப்படைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
நீதிமன்றக் கண்காணிப்பின்றி நீண்ட காலம் தடுத்து வைக்க வழிவகுக்கும் விதிகளை நீக்கும் வகையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (PTA) அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் அல்லது அதனை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
“தேசிய தடுப்பு அமைப்பான ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு’, அரச அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கு வரவிருக்கும் ஐக்கிய நாடுகளின் (UN SPT) தூதுக்குழு ஆகியோருடன் இணைந்து செயல்படவும், சித்திரவதைகளுக்கு எதிரான தடுப்பு வழிமுறைகளை வலுப்படுத்த விரிவான தகவல்களை வழங்கவும் நாம் தயாராக உள்ளோம்,” என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.