தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திமுகவில் இணைந்தது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜய்யின் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் இணையப் போகிறார் என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்து வந்தது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை அதிகாரபூர்வமாக இணைத்துக்கொண்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ்க்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும், முக்கிய ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னதாக அமைச்சர் சேகர்பாபுவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஒரே வாகனத்தில் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது.
திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அவர் மீண்டும் தனது சொந்த தொகுதியான போடி தொகுதியில் போட்டியிடலாம் என்ற அரசியல் தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருடன் ஆதரவாளரான உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பனும் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினைகளால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார்.
கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அவர், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.
அ.தி.மு.க.வை மீட்க சட்டப்போராட்டம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலரும் வேறு கட்சிகளில் இணைந்தனர். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். டி.டி.வி. தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார்.
இதனால், ஓபிஎஸ் எந்த அரசியல் பாதையைத் தேர்வு செய்வார் என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், இன்று திமுகவில் இணைந்தது அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த இணைவு திமுக கூட்டணிக்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேவேளை, அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி மீது இது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்வரும் நாட்களில் தெளிவாகும். தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கவுள்ளது.