தீவிர சிகிச்சையில் 3 பேர் - "மரணம் கூட நிகழலாம்!" - கடும் எச்சரிக்கை!

அழகுக்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிய 3 பேர்! பிரான்சில் சட்டவிரோத 'போட்டொக்ஸ்' (Botox) ஊசி... தீவிர சிகிச்சையில் அனுமதி!

பாரிஸ்: அழகுக்காகப் போடப்படும் 'போட்டொக்ஸ்' (Botox) ஊசிகள் சட்டவிரோதமாகச் செலுத்தப்பட்டதால், மூன்று பேர் 'போட்யூலிசம்' (Botulisme) எனப்படும் கொடிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவலைப் பிரான்சின் மருந்து பாதுகாப்பு நிறுவனம் (ANSM) இன்று (அக்டோபர் 23) உறுதிப்படுத்தியுள்ளது.
முகச் சுருக்கங்களைத் தற்காலிகமாக நீக்குவதற்காக இந்த 'டாக்சின் போட்யூலிக்' (toxine botulique) ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த ஊசிகளை அங்கீகரிக்கப்படாத, தகுதியற்ற நபர்களிடம் போட்டுக்கொள்ளும்போது, அதுவே உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.

தீவிர சிகிச்சையில் 3 பேர்
பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் நோயின் தீவிரம் அதிகமாக இருந்துள்ளது. அவர்களுக்கு மங்கலான பார்வை, பேசுவதில் மற்றும் விழுங்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மிக முக்கியமாக, அவர்களுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ( soins intensifs) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டுப்பாடற்ற அளவுகளில் (surdosage ), தவறான முறையில் அல்லது அங்கீகரிக்கப்படாத போலி மருந்துகளைப் பயன்படுத்தும்போது, இந்த நச்சு நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கி, 'போட்யூலிசம்' (Botulisme) என்ற கொடிய நோயை ஏற்படுத்துகிறது.

"மரணம் கூட நிகழலாம்!" - கடும் எச்சரிக்கை
இந்தச் சம்பவத்தை அடுத்து, பிரான்சின் மருந்து பாதுகாப்பு நிறுவனம் (ANSM) பொதுமக்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
"மருத்துவத் தகுதி இல்லாத நபர்களிடமோ அல்லது அங்கீகரிக்கப்படாத மையங்களிலோ இவ்வாறான  ஊசிகளைச் செலுத்திக்கொள்வது மிகப்பெரிய ஆபத்துக்களை விளைவிக்கும். இதனால் தொற்று (infections), தோல் சிதைந்துபோதல் (nécrose), கொடிய ஒவ்வாமை (réactions allergiques ) மற்றும் மரணம் கூடச் சம்பவிக்கலாம்" என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

சட்டப்படி, அழகுசாதனப் பயன்பாட்டிற்கான 'டாக்சின் போட்யூலிக்' மருந்துகள், ஒரு சிறப்பு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின் பேரில் மட்டுமே மருந்தகங்களில் விற்கப்பட வேண்டும் அல்லது உற்பத்தியாளரால் நேரடியாக மருத்துவருக்கு விநியோகிக்கப்பட வேண்டும். இதனை இணையத்திலோ அல்லது பொதுமக்களுக்கோ நேரடியாக விற்பது சட்டவிரோதமாகும்.

தொடரும் சோகம்
பிரான்சில் இது போன்று நடப்பது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம் கூட, இதேபோல் தகுதியற்ற நபர்களிடம் போட்டாக்ஸ் ஊசி போட்டுக்கொண்ட 8 பெண்கள், போட்யூலிசம் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அழகு நிலையங்கள் என்ற பெயரில் செயல்படும் அங்கீகரிக்கப்படாத மையங்களில் மலிவான விலையில் கிடைக்கும் சிகிச்சைகள், இறுதியில் உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை சான்றாக அமைந்துள்ளன.

- சிவா சின்னப்பொடி