.
வங்கியில் போதுமான நிதியில்லாமல் காசோலையை வழங்கும் ஒருவர், அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ள ஒரு திருத்தத்தின் கீழ் போதுமான நிதி யில்லாமல் காசோலைகளை வழங்குபவரும் மூடிய கணக்கிலிருந்து காசோலைகளை வழங்குபவருக்கும் வரவுள்ள இந்தச் சட்டம் பொருந்துமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6 மாதங்களுக்குட்பட்ட காசோலையொன்றைப் பெறுபவரிடமிருந்து எழுத்துபூர்வமாகப் பணம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு 90 நாட்களுக்குள் காசோலையை வழங்கியவர் பணம் செலுத்தத் தவறினால் அவருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கும் விதிகள் பொருந்தும்.
பரிமாற்ற அவசரச் சட்டத்தின் கீழ் இந்தத் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தத் திருத்தங்களின் கீழ் விதிக்கப்படும் அபராதம் காசோலைக்குச் சமமான தொகையாக இருக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வங்கிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதே இந்தத் திருத்தத்தின் நோக்கமென்று நீதி அமைச்சின் மூத்த அதிகாரியைக் கோடிட்டு செய்தி வெளியாகியுள்ளது.