யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அடுத்ததாக வடக்கு மாகாண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனை தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்தும், புற்றுநோய்ப் பிரிவை வினைத்திறனாக இயங்குவதற்கு வழிவகைகளை ஏற்படுத்துமாறு கோரியும் நாளை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித் துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது:-
தெல்லிப்பழை மண்ணின் புகழ்பூத்த தெல்லிப்பழை மருத்துவமனை போர் மற்றும் இடம்பெயர்வுகளைக் கண்டபோதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அடுத்ததாக வடக்கு மாகாண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனையாகக் காணப்படுகின்றது. அத்துடன், விசேட பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றிவருகின்றது. 

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத்திறனற்ற மருத்துவமனை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மருத்துவமனையில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக மாகாண மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அத்துடன், மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவு இயங்குவதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டுவருகின்றன.

எனவே, இந்த நிர்வாகப் பிறழ்வுகளுக்கு எதிராகக்காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மருத்துவமனையின் வினைத் திறனான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட் வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்வரும் நாளை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட வுள்ளோம் - என்றுள்ளது.