,

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா விவகாரத்தில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க மதுரை மாநகர் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்ஹாவில் ஆடு, கோழி பலியிடும் விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் இன்று (பிப்.4) போராட்டம் நடத்தவிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தமிழ் கடவுள் முருகனின் முதற்படை வீடாகும். திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்ஹாவில் ஆடு, கோழி பலியிட காவல்துறை அண்மையில் தடை விதித்ததை அடுத்து, இஸ்லாமிய அமைப்புகள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தின. இதனையடுத்து இந்துத்துவ அமைப்புகள் ஜனவரி 4 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம் என முழக்கமிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன.  

வெறிச்சோடிக் காணப்படும் திருப்பரங்குன்றம் சாலை,வெறிச்சோடிக் காணப்படும் திருப்பரங்குன்றம் சாலை

இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிவிப்பில், "பிப்ரவரி 4ஆம் தேதியன்று இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 

இதனிடையே இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களைச் சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளது. 

ஆகையால், மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் வராத வகையில் பிப்.3 காலை 6 மணி முதல் பிப்.4 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு, மனித வாழ்வு, பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு (163 BNSS - 144 CrPC) 144 தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். 

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நுழைவாயில்திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நுழைவாயில்

 இதனை அடுத்து நேற்றிலிருந்து திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் தற்காலிக காவல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, உள்ளுக்குள் வருகின்ற அனைத்து நபர்களும் சோதனைக்குப் பின்னரே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மதுரை மாவட்டம் மற்றும் மாநகர எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்துமீறி‌ உள்ளே வருகின்ற நபர்கள் கைது செய்யப்பட்டு, ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
144 தடை உத்தரவை அடுத்து மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் ஏறக்குறைய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் கோயிலைச் சுற்றி மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால், கோயிலைச் சுற்றியுள்ள கடைகள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் மதுரைக்கு வரும் இந்து அமைப்பினரை பிடிக்க ரயில் நிலையம் கிழக்கு நுழைவாயில், மேற்கு நுழைவாயில் என அனைத்து வழிகளிலும் சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போராட்டத்திற்கு வரும் இந்து அமைப்பினரை போலீசார் கண்டறிந்து, அவர்களிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அருகாமையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.