இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு இணைத்த தமிழர்தாயகத்தின் தனித்துவமான இறைமையை நிலைநாட்டுகின்றதும் தமிழ் மக்களினுடைய அரசியல்அபிலாசைகளை வென்றெடுக்கின்றதும், தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்றதுமான ஒரு பலமான அரசியல்கட்சி என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற தேர்தல்கள் அனைத்திலும் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமது பிரதான தலைமை அரசியல்கட்சியாக அங்கீகரித்திருக்கின்றார்கள்.
இந்தநிலையில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களது அண்மைக்கால செயற்பாடுகளும் குறிப்பாக கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அண்மைக்காலத்தில் வெளியிட்டுவரும் கருத்துக்களும் தமிழ்மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் சினத்தையும் தோற்றுவித்துள்ளது. அத்துடன் இந்த இருவரதும் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்தத்தில் கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தகர்கின்ற ஒரு துரதிஸ்டவசமான சூழ்நிலை தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வடக்கு-கிழக்கு வாழ்தமிழர்கள் பெரும்பான்மைச் சமூகத்திற்கு நிகரான அரசியல் அந்தஸ்த்தையும் தன்னிறைவான பொருளாதாரத்தையும் தன்னகத்தே கொண்டதொரு தனித்துவமான இனமாக வாழவேண்டும் என்ற கொள்கையுடன் தந்தை செல்வநாயகம் உள்ளிட்ட இன்னும் பல தமிழ் அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப்போராட்டங்கள் அனைத்தும் சிங்களப் பேரினவாத சக்திகளால் அன்று அடக்கப்பட்டன. அதன்பின்னரான காலங்களிலேயே தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்கானதும் தமிழீழ தனியரசை இலட்சியமாகக் கொண்டதுமான போராட்டம் ஆயுத வழியில் பரிணமித்தது.
தெடக்ககாலத்தில் இத்தகைய ஆயுதவழிப் போராட்டத்தை பல்வேறு தமிழ் போராளி இயக்கங்கள் முன்னெடுத்திருந்தாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் வரித்துக்கொண்ட இலட்சியத்தில் சிறிதளவும் வழுவாது முப்பது ஆண்டுகளாக நிலைபெற்று நின்றது. அந்த முப்பது ஆண்டுகளில் அந்த இயக்கம் செய்த உயரிய தியாகங்களையும் உன்னதமான அர்ப்பணிப்புக்களையும் ஈழத்தமிழர்கள் எந்தக் காலத்திலும் மறப்பதற்கில்லை. அவையெல்லாம் தமிழ்மக்களின் மனங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளன. அத்தகைய பலமான இயக்கமும் உலக வல்லாதிக்கசக்திகளின் நவீனரக படைக்கலங்களின் உதவிகளுடனும் துரோகிகளின் காட்டிக்கொடுப்புக்களாலும் 2009-ம்ஆண்டில் முள்ளிவாய்க்காலில் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
ஆனாலும் அந்த இயக்கம் எந்த இலட்சியத்தை வரித்துக்கொண்டு தனது இறதிக்கணம் வரையிலும்; போராடியதோ அந்த இலட்சியமான தமிழீழம் என்ற இலட்சியக்கனவு ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ஒவ்வொரு தமிழ்க் குடிமக்களது மனங்களிலும் இலட்சிய நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டபோதும் அதன் கடைசி எச்சமாக கருதித்தான் தமிழ்மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு தங்களின் பெறுமதியான வாக்குகளை அளித்து கூட்டமைப்பு உறுப்பினர்களாகிய உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.
கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரவலத்திற்கும் அங்கு சிங்களப்படைகள் தமிழ்மக்கள் மீது புரிந்த மனிதவுரிமை மீறல்களுக்கு நீதி கேட்கின்ற ஒரு இடமாகவும், சிங்களபேரினவாத அரசு திட்டமிட்டு அப்பாவித் தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைகளை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அந்த கூட்டத்தொடர் அமைந்திருந்த போதிலும் அந்த வாய்ப்பை தமிழ்தேசியக் கூட்டமைப்பு உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது.
வன்னியின் இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்கள் அனைத்தையும் ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பகிரங்கப்படுத்துவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை அந்த மக்களிடத்தில் குடிகொண்டிருந்தது. ஈழத்தமிழர்களுக்காக உரிமைக் குரலெழுப்ப வேண்டிய வரலாற்றுக்கடமை தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் கைகளிலேயே உள்ளது. அதனை ஒவ்வொரு தமிழ் குடிமகனும் தங்களது பெறுமதியான வாக்குகளின் மூலமாக அந்த அங்கீகாரத்தை கூட்டமைப்பினருக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில் ஜெனீவாவில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களின் அழைப்பையேற்று அலரிமாளிகைக்குச்சென்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் அங்கு மகிந்தராஜபக்ச வழங்கிய விருந்துபசாரத்தில் தன்னை மெய்மறந்துவிட்டார். ஜனாதிபதி தந்திரமாக வீசியவலையில் சம்பந்தன் வீழ்ந்துவிட்டார் என்பதுதான் யதார்த்தபூர்வமான உண்மையாகும்.
சம்பந்தனுக்கு விருந்தளித்த ஜனாதிபதி அவர்கள் ஜெனீவாகூட்டத் தொடருக்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு செல்வதை தவிர்க்குமாறு சம்பந்தனிடம் வேண்டியிருந்தார். சம்பந்தரும் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு தலையாட்டிவிட்டுவந்துவிட்டார். தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஜெனீவா மாநாட்டை தவிர்த்திருக்கின்ற விடயம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்த பின்னர்தான் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தமது கட்சித்தலைமை எடுத்த முடிவை அறியக்கூடியதாகவிருந்தது. ஜெனீவாமாநாட்டை கூட்டமைப்பு தவிர்த்திருந்தமையானது சம்பந்தனும் சுமந்திரனும் எடுத்த தனிப்பட்ட முடிவுகளேயன்றி அது கட்சியின் ஒருமித்த தீர்மானம் அல்ல என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். இவர்கள் இருவரும் எடுத்த இந்த முடிவில் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்ததுவும் குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்பின் இந்தமுடிவால் அநேகமான தமிழ்மக்களும் அதிருப்தியடைந்திருந்தனர்.
இருப்பினும் புலம்பெயர் தமிழர்களின் கடும்பிரயத்தனத்தால் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பங்கேற்கச் சென்றிருந்தால் தென்னிலங்கையில் இனவாதி விமல்வீரவன்சவின் ஆதரவாளர்கள் தமிழர்களின் வர்த்தக நிலையங்கiளுக்கு தீவைத்து எரியூட்டுவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் கூட்டமைப்பு ஜெனீவாவிற்கான பயணத்தை தவிர்த்திருந்ததால் தெற்கில் ஏற்படவிருந்த கலவரம் தடுக்கப்பட்டுள்ளது என்று அப்போது அரசல் புரசலாக கதையொன்று காதுகளுக்கு எட்டியிருந்தது. அவ்வாறு ஒரு கலவரம் ஏற்பட்டிருந்தாலும் அந்தச்சூழ்நிலையில் அது சர்வதேசஅரங்கில் தமிழர்களுக்கு மிகவும் சாதகமாகவே அமைந்திருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
ஜெனீவா விடயம் மக்கள் மத்தியில் தணிந்து கொண்டுபோக, கடந்த மேதினத்தன்று யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து நடாத்திய மேதினஊர்வலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இணைந்து சிங்கக்கொடியை ஏந்தியிருக்கின்றார். உண்மையில் அந்த நிகழ்வில் சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் கொடியைத்தான் ஏந்தியிருக்கவேண்டும். அதைவிடுத்து ரணிலுடன் சேர்ந்து சிங்கக்கொடியை தூக்கிப் பிடித்தமையானது தமிழரசுக்கட்சியையும் தமிழ்மக்களையும் சிறுமைப்படுத்துவதாகவே அந்தச்சம்பவம் அமைந்திருந்தது. இந்த விவகாரம் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உள்ளகமட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பூதாகாரமாக உருவெடுத்திருந்தபோதிலும் அதையெல்லாம் சம்பந்தன் ஊதாசீனப்படுத்தியது போல ‘நான் விரும்பும்கொடி சிங்கக்கொடிதான். அதனை எத்தனை தடவையென்றாலும் ஏந்துவேன். எனக்கு யாரும் அறிவுரை சொல்லத்தேவையில்லை.’ என்று அதிகாரம் தலைக்கேறியவராக கொக்கரித்திருக்கின்றார். அண்மைக்கலமாக சம்ந்தன் ஐயாவின் அறளைபேந்த கருத்துக்களும் செயற்பாடுகளும் தமிழ்மக்களின் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் விமர்சனங்களையும் தோற்றுவித்திருக்கின்றது.
அடுத்ததாக தமிழ்தேசியக்கூட்டமைப்பில் சுமந்திரன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளார். இவர் ஒரு சட்டத்தரணியாவார். இவர் தேர்தால்களத்தில் நின்று மக்களின் அங்கீகாரத்துடன் பாராளுமன்றம் செல்லவில்லை. மாறாக தான் சட்டத்தரணி என்ற அடிப்படையில் சம்பந்தனிடத்தில் தனக்கிருந்த செல்வாக்கினை பயன்படுத்தி தேசியப்பட்டியல் நியமனத்தின் ஊடாகவே இவர் நாடாளுமன்றம் சென்றிருக்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் செயற்பட்ட காலத்தில் இந்த சுமந்திரன் யார் என்றே அநேகமான தமிழ்மக்களுக்கு தெரியாது. அப்படிப்பட்ட சுமந்திரனுக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் புனிதமான விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியதாகவும் சிறுமைப்படுத்தியதாகவும் கருத்துக்களை வெளியிட்டு அரசியல் செய்யுமளவிற்குத்தான் சுமந்திரனின் வங்குரோத்து அரசியல் நிலைமை உள்ளது.
அண்மையில் சிங்கள தொலைக்காடசி சேவை ஒன்றுக்கு சுமந்திரன் செவ்வி வழங்கியிருந்தார். அந்த செவ்வியில் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுத்திருந்தவர்கள் அனைவரும் வேலையற்றவர்கள் என்று கூறியிருக்கின்றார். சுமந்திரனுக்கு நான் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன். தமிழர்களின் ஆயதப்போராட்டத்தில் பங்கெடுத்து முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களும யுவதிகளும்; உன்னதமான தியாகங்களைப் புரிந்து தங்களின் உயிர்களை தற்கொடையாக்கியிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் வாழ்வதற்கு பல வழிகள் இருந்தும் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் சொந்தபந்தங்கள் இருந்தும் அவற்றுக்கெல்லாம் மேலாக தமிழீழ மண்ணையும் தமிழீழ மக்களையும் ஆழமாக நேசித்ததன் விளைவாகவே அத்தகைய உயர்ந்த தியாகங்களை அவர்கள் செய்திருக்கின்றார்கள். அத்தகைய புனிதமான விடுதலைப்போராட்டத்தை விமர்சிப்பதற்கு போராட்டகாலத்தில் எங்கோ ஒரு மூலையில் பார்வையாளராக இருந்த சுமந்திரனுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ்மக்கள் தங்களது ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஒரு கருத்தை கூறியிருக்கின்றார். 2004-ம்ஆண்டில் தமிழ்தேசியக்கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களது ஏகபிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகள்தான் என்ற அம்சம் அதில் பிரதானமாக உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. அதற்கமைவாகவே தமிழ்மக்களின் அமோகமான ஆதரவைப்பெற்ற கூட்டமைப்பு இருபத்திரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்லக்கூடிய தகுதியைப்பெற்றது.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் 2010-ம்ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் கூட்டமைப்பு சார்பாக பதின்மூன்று உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு தமிழ்மக்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றமையும் அதன்பின்னர் நடைபெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தல்களிலும் விடுதலைப்புலிகளின் கடைசி எச்சமாக இருப்பது தமிழ்தேசியக்கூட்டமைப்பு என்ற யதார்ர்த்தத்தின் அடிப்படையிலேயே தமிழ்மக்கள் தங்களது ஆதரவினை வழங்கியிருந்தார்கள். எனவேதான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது.
தமிழ்தேசியக்கூட்டமைப்பில் ஐந்து அரசியல்கட்சிகள் கூட்டுச்சேர்ந்திருக்கின்றனர். அத்துடன் பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். எனவே கூட்டமைப்பு சார்ந்த எந்தவொரு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற சந்தர்ப்பத்திலும் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்துதான் அந்த தீர்மானங்களை நிறைவேற்றுவது சாலப்பொருத்தமானது. அதைவிடுத்து கடசித்தலைவர்களையும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஓரம்கட்டிவிட்டு தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்ற எந்த விடயத்திலும் சம்பந்தனும் சுமந்திரனும் தனித்து முடிவெடுப்பதற்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு அவர்கள் இருவருக்கும் எழுதிக்கொடுக்கப்பட்ட சீதனச்சொத்து அல்ல. தொடர்ந்துவரும் நாட்களிலும் தமிழ்மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக சம்பந்தனும் சுமந்திரனும் தான்தோன்றித்தனமாக தலைக்கனமேறி தாண்டவமாடுவார்களாகவிருந்தால் அவர்களை தமிழ்மக்கள் அவர்களை முற்றாக நிராகரிக்கும் நிலையே ஏற்படும்.
-செங்கோ
நன்றி: tamil24news.com


Posted in