தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் பிரிட்டிஷ், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது அதி உச்ச கவனத்தைச் செலுத்தியுள்ளன. இது தொடர்பில் அந்தந்த நாடுகளின் இலங்கையிலுள்ள தூதுவர்கள் விசேட அவதானம் செலுத்தி வருகின்றனர் என அறிவித்துள்ளனர்.
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனைச் சந்தித்த மேற்படி நாடுகளின் தூதுவர்கள், குறித்த அவதானம் தொடர்பில் எடுத்துக்கூறியுள்ளனர்.
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நகர்வுகளையும் மிக உன்னிப்பாக நாம் அவதானித்து வருகின்றோம். அதில் தங்களின் பங்களிப்பு அதிகப்படியாக உள்ளதையும் அறிகின்றோம் என்றும் குறித்த மூன்று நாடுகளின் தூதுவர்களும் மனோ கணேசனிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சில தரவுகள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும், மேலும் சில விடயங்களைப் பெற்றுக்கொண்டு வரவுள்ளனர் என்றும் அந்த நாடுகளின் தூதுவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இந்த வாரமளவில் இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது மலையக மக்களின் பிரச்சினை, இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், இந்திய எதிர்க்கட்சித் தலைவியிடம் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Posted in