தெரிவுக்குழுவுக்கு வருமாறு அழைத்து கூட்டமைப்பு மீது சேறுபூச அரசு முயற்சி; பொது எதிரணிக் கட்சிகள் குற்றச்சாட்டு

TNA-Govt-meting

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் தமது உண்மையான நிலைப்பாட்டையும், ஒழுங்குப் பத்திரத்தையும் நாட்டில் பகிரங்கப்படுத்த முடியாத அரசு, கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைத்து, அவர்கள் மீது சேறு பூச முயற்சிக்கின்றது.

 இதற்கு ஒருபோதும் இடமளியோம் என தெரிவித்துள்ளன பொது எதிர்க்கட்சிகள்.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு முட்டுக்கட்டையிடும் சூத்திர தாரிகளும், பேரினவாதிகளும் அரசுக்குள்ளேதான் இருக்கின்றனர். இத்தகைய அரசை நாம் இனிமேலும் ஆட்சியிலிருக்க அனுமதிக் கக்கூடாது.
மஹிந்த அரசை வெடித்துச் சிதறவைத்து வீட்டுக்கு ஓட வைப்பதற்கு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மாபெரும் நாடுதழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளோம் எனவும் அவை அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொது எதிர்க்கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்தன.
அவை மேலும் தெரிவித்தவை வருமாறு:
 
கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன
தமிழ் மக்களுக்கு இதயசுத்தியுடன் தீர்வொன்றை வழங்க முன்வராத மஹிந்த அரசு, காலங்கடத்துவதிலேயே முனைப்புக் காட்டி வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என அரசு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகின்றது.
இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் அரசு தனது உண்மையான நிலைப்பாட்டையும்  ஒழுங்குப் பத்திரத்தையும் நாட்டில் பகிரங்கப்படுத்த வேண்டும். எந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு தீர்வை மேற்கொள்ளத் தயாராகின்றது என்பதை அது தெளிவுபடுத்த வேண்டும்.
தம்மால் செய்யப்பட வேண்டிய செயற்பாடுகளை அரசு சரியாக நடைமுறைப்படுத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைக்கின்றது. இது அரசின் காலங்கடத்தும் செயலையே எடுத்துக்காட்டுகின்றது.
சர்வதேசத்திற்கு தரகுவேலை பார்க்கும் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்ப பொது எதிர்க்கட்சிகளாகிய நாம் தயார். நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோத்து செயற்பட முன்வரவேண்டும் என்று நவ சமசமாஜக் கட்சியின் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
 
சிறிதுங்க ஜெயசூரிய
நாட்டைப் பாதாளத்திற்குள் தள்ளிவருகின்ற மஹிந்த அரசு, ஆட்டம், கொண்டாட்டம், திருமணவிழா என குதூகலித்துக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்துக்கும் அப்பாவிகளான மக்களின் பணத்தை வாரியிறைத்து நாசம் செய்கின்றது.
 இதற்கு அரசு பொறுப்புக்கூறியாக வேண்டும். இதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜிநாமாச் செய்யவேண்டும்.
பொலிஸ் விளையாட்டரங்கில் இந்திய நடிகைகளின் பங்கேற்புடன் இடம்பெறும் மாபெரும் ரகர் உற்சவத்தில் பலகோடி ரூபா பணத்தை அரசு வாரியிறைத்துள்ளது. ரகர் இப்போது அரச விளையாட்டாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் அடுத்த தவணைக் கடனைப் பெறுவதற்காக அரசு முயற்சி செய்கின்றது. அதனிடம் கடன் பெறாமல் மஹிந்த அரசால் நாட்டை ஆட்சிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமாயின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாட்டிற்குப் பெரும் பாதகமானதாகவே அமையும்.
இதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு மஹிந்த அரசை வீட்டுக்குத் துரத்தியடிப்பதற்காக மாபெரும் போராட்டத்தை நடத்தவேண்டும். அதற்கு நாம் தயாராகவே உள்ளோம். மக்கள் அனைவரும் எம்முடன் இணையவேண்டும்.
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் சதவீதக் கணக்கு இனி நாட்டில் எடுபடாது. அடுத்த வரவுசெலவுத்திட்டத்தை அரசு நாட்டு மக்களுக்குச் சாதகமான  வகையில் அமைக்கவேண்டும். அதற்காக நாம் நாடு முழுவதும்
ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய கூறினார்.
 
ஜயலத் ஜயவர்தன எம்.பி.
வடக்கில் தேர்தலை நடத்துவதற்கு அரசிற்கு அச்சமில்லையெனில், சுயாதீன பொலிஸ், தேர்தல்கள் திணைக்களம், அரச சேவைகள் திணைக்களங்களை நிறுவி அங்கு தேர்தலை நடத்துமாறு அரசிற்கு சவால் விடுக்கின்றேன்.
வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசு அரசியல் தீர்வை வழங்கத்தயார் எனில், ஏன் அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த மறுக்கின்றது? இன்று வடக்கில் இடம்பெறுகின்ற அனைத்து சிவில் நடவடிக்கைகளிலும் இராணுவத்தினரின் தலையீடு அதிகரித்து வருகின்றது. இதனை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.
நாம் தேர்தலைக் கண்டு அஞ்சுபவர்களல்லர். நாம் எப்போதும் தேர்தலுக்குத் தயார். மாகாணசபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரசுக்கு அச்சம் இல்லையெனில், வடக்கில் அனைத்துத் துறைகளையும் சுயாதீனப்படுத்தி வடமாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டும். அதுமட்டுமல்லாது, நாட்டு மக்கள் சுதந்திரமாகத் தகவல் அறியும் சட்டமூலத்தையும் நாடாளுமன்றில் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்தவேண்டும்  என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.
 
அருண சொய்ஸா
கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் 14ஆவது மாநாட்டில் அதன் தலைவர் சம்பந்தன் எம்.பி. தனது உரையில்
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு சிங்கள சமூகம் முன்வரவேண்டும். ஜனாதிபதி மஹிந்த அரசு இனிமேலும் தீர்வு விவகாரத்தில் காலங்கடத்தக்கூடாது. இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
 இவரது உரையில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க சிங்கள மக்கள், அரசியல்வாதிகள் அனைவரும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முன்வரவேண்டும் என்று ருஹுணு தேசிய கட்சிச் செயலாளர் அருண சொய்ஸா தெரிவித்தார்.
Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress