வாக்குறுதிகளை மகிந்த நிறைவேற்றாத வரை இலங்கை செல்வதில்லை: மன்மோகன்சிங் முடிவு

manmokan_001

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு வரத் தயாராக இல்லை என்று புதுடெல்லியில் உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் உடனடித்திட்டங்கள் எதுவும் இல்லை என இந்திய அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2009இல் விடுதலைப்புலிகளுக்கெதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக் குவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2008ஆம் ஆண்டில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதுவும் இருதரப்புப் பயணமாக அமையவில்லை. சார்க் மாநாட்டுக்காகவே அவர் இலங்கை சென்றார்.

கடந்த 2010 ஜுன் மாதம் புதுடெல்லிக்கு இருதரப்புப் பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இந்தியப் பிரதமரை கொழும்புக்கு வருமாறு அழைத்திருந்தார்.

இந்த அழைப்பு விடுத்து இரண்டு ஆண்டுகளாகியும், மன்மோகன்சிங் அதை ஏற்று கொழும்புக்கு செல்லவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி மகிந்த வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது, இந்தியப் பிரதமர் எவ்வாறு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அதிகாரப் பகிர்வை வழங்குவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவிடமும், சுஸ்மா சுவராஜிடமும் தெரிவித்திருந்தார். இவையெல்லாம் வெறும் கடதாசியிலே உள்ளன.

சீபா எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவை இந்தியாவை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்த உடன்பாடு தயாராகி இரண்டு ஆண்டுகளாகியும் தூசிபடிந்த  நிலையிலுள்ளது. இந்தியாவுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றியிருந்தால், கடந்த மாதம் கொண்டாடப்பட்ட புத்தரின் 2555ஆவது பரிநிர்வாண நாளில் மன்மேகன்சிங் கொழும்பு சென்றிருப்பார் என அவ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

1957ஆம் ஆண்டு மே மாதம், புத்த ஜெயந்தியில் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress