ஐ.நாவின் உண்மை கண்டறியும் குழுவை சிறிலங்காவுக்குள் அனுமதிக்க முடியாது – மொகான் பீரிஸ்

mohan_peiries

உள்நாட்டு விவகாரம் குறித்து சிறிலங்காவில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு நாட்டுக்கும் இடமளிக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் சட்டமாஅதிபரும், சிறிலங்கா அதிபரின் சட்டஆலோசகருமான மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, ஐ.நாவின் உண்மை கண்டறியும் குழு கொழும்பு வருவதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“போருக்குப் பிந்திய நிலைமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து நேரில் கண்டறிய வருமாறு நவநீதம்பிள்ளைக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் எந்தவொரு ஐ.நா உண்மை கண்டறியும் குழுவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

நவிபிள்ளைக்கும் கூட கடந்த ஆண்டு தான் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஜெனிவா தீர்மானத்தை அடுத்து இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை.

உண்மை கண்டறியும் நோக்கில் தமது அதிகாரிகள் குழுவை சிறிலங்காவுக்குள் அனுமதிக்குமாறு நவிபிள்ளை சிறிலங்கா அரசிடம் கேட்டுள்ளார்.

நவிபிள்ளை தனது பயணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கவோ, பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளவோ இந்த அதிகாரிகளை அனுப்புவதானால் அதுபற்றி சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

அவர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்க விரும்பினால், சிறிலங்கா அரசாங்கத்தின் இணக்கத்துடன் தான் அதைச் செய்ய முடியும். யாரும் வந்து இங்கு விசாரணைகளை நடத்த அனுமதிக்க முடியாது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress