தென்னாபிரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு

Sampanthan-ANC

தென்னாபிரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது.  இந்த அழைப்புக் குறித்து தாம் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஆராயவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான பிரதி அமைச்சர் எப்ராகிம் எப்ராகிம் தலைமையிலான உயர்மட்டக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க குழு கொழும்பு வந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவை முதலில் சந்தித்துப் பேசியது.

இதன்பின்னர், சிறிலங்கா அதிபர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்தது.

இதன்பின்னர், மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரண்டாவது தடவையாகவும் பேச்சு நடத்தியது.

இதன்போதே, மேலதிக பேச்சுக்களை நடத்த தென்னாபிரிக்கா வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரேஸ் பிறேமச்சந்திரன்,

“சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு உதவுவதில் தென்னாபிரிக்க குழு மிகவும் அக்கறை காட்டியது.

சிறிலங்கா விவகாரத்தில் அனுசரணை வழங்குவதில் தென்னாபிரிக்கா கரினை கொண்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் அனுசரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கிறது.

தென்னாபிரிக்காவின் அனுபவங்கள் எமக்கு உதவியாக இருக்கும்.

நோர்வேயின் அனுசரணையுடன் தென்னாபிரிக்காவின் அனுசரணையை ஒப்பிட முடியாது.

இனவிவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்ற நாடு” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா நடத்திய பேச்சுக்களில் பங்கேற்ற சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் விரைவில் தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress