மண்ணில் வாழும் மக்களுக்கு மழை தேவை என்பதற்காக மேகங்கள் திரள்வதில்லை. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்தியா இலங்கைக்கு வருவதில்லை.
ஆனாலும் நீரற்ற மாகாண சபைகளில் காணி, காவல் துறை மற்றும் நிதி உரிமை என்கிற மீன் பிடிக்க, தமிழ் கொக்குகள் சில காத்திருக்கின்றன.இந்திய மேகங்கள் கொழும்பில் பெய்யும் மழை, வட-கிழக்கில் பெய்வதில்லை. காத்திருக்கும் தமிழ் கொக்குகளும், இந்திய மேகங்கள் இல்லாவிட்டால், தமிழர் தாயகத்தில் மழை பொழியாதென்கிற கற்பனையில் வாழ்வதை சரியென்று நியாயப்படுத்துகின்றன.
அரசியலமைப்பை மாற்றாமல், எந்தப் பங்கீடும் நடைபெறாது என்பது தான் உண்மை.
‘வாய்க்கால் வழியோடும் நீர் புல்லுக்குமாங்கே பொசியும்’ என்பது போலான அதிகாரப் பரலராக்கத்தை தமிழ் மக்கள் ஏற்கவில்லை.
இவையனைத்தையும் தெளிவாக புரிந்து வைத்துள்ள இந்திய மேகங்கள், இம்மாதம் 108 நிறுவனங்களோடு, கொழும்பில் கூடுவதாக வானிலைச் செய்திகள் கூறுகின்றன.
முழுமையான சீபா’[CEPA] என்கிற முதலீட்டு வானாதிக்கத்தை நிகழ்த்த முடியாவிட்டாலும், ‘முயன்று பார்ப்போம்’ என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் கொழும்பில் களமிறங்குகின்றது இந்தியா.
கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தத்தை இணைக்குமென்று, தேர்தல் பரப்புரைகளில் பொய் சொல்லும் தமிழ் கொக்குகள், இந்தியாவின் முதலீட்டு ஆதிக்கம், வடகிழக்கில் மாதம் மும்மாரி பொழியச் செய்யுமென்கிற வியாக்கியானத்தை முன் வைக்கலாம்.
கொழும்பில் கூடும் இந்திய கருமேகங்கள், மனித உரிமைப் பேரவையில் யூ.பீ.ஆர் [UPR]ஊடாக இடி முழக்கத்தை ஏற்படுத்துவோமென அச்சுறுத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது.
வானில் தோன்றும் இடி முழக்கங்களும், மின்னல்களும், மழை பொழிவதற்கான அறிகுறிகள் என்பது அறிவியல் உண்மை.
ஆனாலும், மேகங்களைக் கலைக்கும் இராஐதந்திர உத்தியில் நிபுணத்துவம் பெற்றுள்ள சிங்களம், இந்தியக் கருமேகங்களை எவ்வாறு விரட்டியடிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தது பார்க்க வேண்டும்.
கொழும்பின் திறைசேரி வாவியின் நீர் மட்டம் குறைவடைந்து செல்வதனால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில், இந்தியாவின் முதலீட்டு வருகையை இலங்கை அனுமதிக்கலாம்.
இருப்பினும், திறைசேரி வாவியை, இந்தியா முழுமையாக ஆக்கிரமிக்க இலங்கை அனுமதிக்காது என்கிற விடயத்தையும் கவனிக்க வேண்டும்.
தமிழர் உரிமை குறித்துப் பேசாத சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்றவற்றின் முதலீட்டு மேகங்கள் இலங்கையில் கடன் மழை பொழிவதையே மகிந்த ஆட்சி விரும்புகிறது.
ஆகவே, இம்மும்மூர்த்திகள் போன்று, தாமும் இன முரண்பாட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்காமல், சிங்கள தேசத்தோடு புதிய உறவொன்றினை ஏற்படுத்த முடியுமாவென்று இந்தியா முயற்சித்துப் பார்க்கிறது.
சர்வதேசத்தை அணுகாமல், மகிந்தரின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் செல்லுங்களென்று, இந்தியாவின் உத்தியோகப்பூர்வமான தூதுவர் அசோக் கே.காந்தா கூட்டமைப்பினரிடம் வலியுறுத்திய விடயம், இந்தியாவின் புதிய போக்கினை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஆகவே, வல்லரசு மேகங்கள் இலங்கை வான்பரப்பில் மோதும் சாத்தியப்பாடுகள் அதிகம் தென்படுவதால் சிங்களப் பேரினவாதத்தின் தீவிரமான பக்கங்கள், எத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்கும் என்பதைi தமிழ் மக்கள் அவதானிக்க வேண்டும்.
இம்மோதல்களே, விடுதலைக்கான முதல் வாசற் கதவை திறந்து விடலாம்.


Posted in