அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழரான றமணன் கனடாவுக்கு அனுப்பப்படவுள்ளார்

Mylvaganam-Ramanan

சிறிலங்காவில் செயற்பட்ட புலிகள் அமைப்புக்கு கருவிஒன்றைக் கைமாற்றம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடியத் தமிழரான றமணன் மயில்வாகனம் என்பவரை ‘கால மாற்றத்தைக்;’ கருத்திலெடுத்து வரும் வாரங்களில் கனடாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த திங்களன்று அமெரிக்க சமஸ்டி நிர்வாக நீதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பானது அமெரிக்க மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான பேச்சாளர் றொபேற் நர்டோசா தெரிவித்துள்ளார். 2009 இலிருந்து றமணன் மயில்வாகனம் என்கின்ற இக்கனேடியத் தமிழர் அமெரிக்காவின் புறூக்கிளின் N.Y நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

35 வயதான றமணன் மயில்வாகனம் 2006ல் ஒன்றாரியோவில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்த காலத்தில் பயங்கரவாத நிறுவனத்துக்கு கருவி ஒன்றை வழங்க முற்பட்டதாக குற்றம்சட்டப்பட்ட றமணன் மயில்வாகனம் பின்னர் மேலதிக விசாரணைக்காக புறூக்கிளினுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தன் மீதான வழக்கு விசாரணை தொடர்பில் கருணை காட்டுமாறும், காலத்தின் மாற்றத்தைக் கருத்திற் கொண்டு தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையைக் குறைக்குமாறும் றமணன் மயில்வாகனம் பெப்ரவரி 08 அன்று நடைபெற்ற நீதிமன்ற அமர்வில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

“இன்னும் சில வாரங்களில் மயில்வாகனத்தை விடுவிக்கவுள்ளனர் என்ற செய்தி எம்மை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை எங்களால் அறியமுடியவில்லை. உண்மையில் இது மிகப் பெரிய செய்தியாகும்” என அவரது சகோதரரான ராகவன் கதிரவேற்பிள்ளை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்ய முற்பட்டதானது மிக மோசமான குற்றச் செயல் என்பதைக் காரணங்காட்டி மயில்வாகனத்துக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் உறுதியாக அறிவித்திருந்தனர். புலிகளுக்கு கருவிவழங்க முற்பட்டதன் பேரில் றமணன் மயில்வாகனத்துடன் சுரேஸ் சிறிகந்தராசா என்கின்ற தமிழர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதால், கால மாற்றத்தைக் கருத்திற் கொண்டு றமணன் மயில்வாகனத்தை விடுவிக்க வேண்டும் என இவரது சட்டவாளர் வாதிட்டிருந்தார்.

“என்னை விடுதலை செய்து விட்டால் நான் எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருப்பேன் என நான் இங்கு உறுதிபடத் தெரிவிக்கிறேன்” என றமணன் மயில்வாகனம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தனது சிறுவயதில் தகப்பனாரை இழந்த மயில்வாகனம் தனது பன்னிரெண்டாவது வயதில் சிறிலங்காவை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறினார். அதன் பின்னர் இவரது குடும்பத்தவர்களும் கனடாவில் குடியேறிக் கொண்டனர்.

“இவர் தனது குடும்பத்தவர்களை கனடாவுக்கு கொண்டு வருவதில் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளார். இவர் தனது வாழ்வில் பல்வேறு துன்பங்களையும், தடைகளையும் சந்தித்துள்ளார்” என மயில்வாகனம் சார்பாக வாதாடிய சட்டவாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வோற்றலூ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது, மயில்வாகனம் அங்கு செயற்பட்ட தமிழ் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக செயற்பட்டிருந்தார். இவருடன் குற்றம் சாட்டப்பட்ட சிறிஸ்கந்தராசா இச்சங்கத்தின் தலைவராகச் செயற்பட்டிருந்தார்.

மார்ச் 2006ல் இவ்விரு கனேடியத் தமிழர்களும், 22,000 டொலர் பெறுமதியான நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் போர்க்கப்பல் வடிவங்களைக் கொண்ட மென்பொருள் ஒன்றை, புலிகளுக்காக ‘உலகம் பூராவும் கருவிக் கொள்வனவில்’ ஈடுபடும் நபர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் வாங்க முற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன், புலிகள் அமைப்புக்கான தொடர்பாடல், கணிணி, இலத்திரனியல் மற்றும் இரவு நோக்கு கருவிகளை கொள்வனவு செய்வதில் உறுதுணையாக இருந்தார் எனவும் றமணன் மயில்வாகனம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது மூன்று ஆண்டுகளின் முன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து, சிறிலங்காவானது தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றுக்கு முகங்கொடுக்க வேண்டும் என பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் உண்மையில் என்ன நடந்ததென்பதை நேரில் பார்த்த சாட்சியங்களின் கதைகளை உள்ளடக்கிய நூலொன்றை வெளியிடவுள்ளதாக கடந்த வாரம் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய முன்னார் பி.பி.சி சேவையின் ஊடகவியலாளரான பிரான்சிஸ் கரிசன் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் 7000 தொடக்கம் 147,000 வரையானோர் கொல்லப்பட்டதாகவும் பிரான்சிஸ் கரிசன் மேலும் தெரிவித்திருந்தார்.

செய்தி வழிமூலம்: National Post

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress