ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதலாம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா தொடர்பான மீளாய்வுக் கூட்டத்துக்கான, சிறிலங்காவின் அறிக்கை இன்று ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பிக்க வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் இன்றுடன் முடிகிறது.
சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த அறிக்கையை தயாரித்து, சிறிலங்கா அதிபரிடம் சுமார் 10 நாட்களுக்கு முன்னரே சமர்ப்பித்திருந்தார்.
இதன் பிரதிகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் முன்னாள் சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையில் சிறிலங்காஅதிபர் இன்று ஒப்பமிடுவார் என்று எதிர்பார்ப்பதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த அறிக்கை மின்னஞ்சல் மூலம் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்படும்.
2008ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மீளாய்வுக்குப் பின்னர், இதுவரை சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமைகளை பேணுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அறிக்கையில் திருத்தங்கள் பல செய்யப்பட்டு வருவதால், இறுதி செய்து கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காஅதிபரின் செயலர் லலித் வீரதுங்கவே அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Posted in