கிளிநொச்சி பிரதேசங்களில் இளைஞர்கள் மீது புலனாய்வு பிரிவினர் விசாரணை

கிளிநொச்சியின் பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இளைஞர்களை பலவந்தமாக கூட்டிச்சென்று இராணுவ குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிலரை தாக்கியுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பிரதேசங்களான அக்கராயன், வன்னேரிக்குளம், ஸ்கந்தபுரம் விசுவமடு போன்ற பகுதிகளில் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்று கூறி பிரத்தியேகமான இடங்களுக்கு அழைத்துச் சென்று படைப்  புலனாய்வுப் பிரிவினர் இளைஞர்களை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர். இயக்கத்தில் இருந்தாயா? எந்த பிரிவு? எவ்வளவு காலம்? போன்ற கேள்விகளை கேட்கும் புலனாய்வுப் பிரிவினர் இல்லை என பதில் கூறுபவர்கள் மீது கடும் தொனியில் விசாரிப்பதுடன் சிலர் மீது கடுமையாக தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்இவ்வாறு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கைரேகை அடையாளம், புகைப்படம் முழுமையான சுயவிபரங்கள் என்பன எடுக்கப்பட்ட பின்பே அனுப்புகின்றனர்.
பிறந்த ஆண்டு முதல் தற்போது வரை வாழ்ந்த இடங்கள் செய்த வேலைகள் உள்ளிட்ட விபரங்கள் அவர்களினால் பெறப்படுகிறது.
இவர்களின் விசாரணைகளுக்கு புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் போராளிகள் மற்றும் இயக்க நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் உள்ளிட்ட பலர் உட்படுத்தப்படுகின்றனர். மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிலர் இன்னும் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு சம்பவம் அண்மையில் விசுவமடுவில் இடம்பெற்றுள்ளது மேலும் தடுப்பு முகாமிலிருந்து புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஜஓஎம் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் கடிதங்களை வைத்து பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புகலிடம் கோரிச் செல்கின்றனர் என்ற சந்தேகத்தில் படைப் புலனாய்வுப் பிரிவினர் அவ்வாறான ஆவணங்களை பறித்தும் சென்றுள்ளனர்.
இதனால் இப்பொழுது வன்னியில் வாழும் மக்கள் அச்சத்தில் இருப்பதுடன், அரசின் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுதலையானவர்களை மீண்டும் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தும் செயலானது, சகலதையும் இழந்து வெறுங்கையோடு  உள்ள மக்களை பெரும் துயரத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress