குன்னூரில் பயிற்சிபெறும் சிறிலங்கா படை அதிகாரிகளை வெளியேற்றுமாறு மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம்

Jayalaliitha

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றுமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

“குன்னூர் இராணுவ பயிற்சி மையத்துக்கு சிறிலங்காப் படை உயர்அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு உயர் மரியாதை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிறிலங்காவில் தமிழ் மக்களைக் கொன்று குவித்து, தற்போது அங்குள்ள தமிழ் மக்களை விலங்குகளை விட கேவலமாக நடத்தும் சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது, உயர் அதிகாரிகளுக்கு உபச்சாரம் செய்வது ஆகியன தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளது.

தாம்பரத்தில் சிறிலங்கா விமானப் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு தமிழ்நாடு மக்கள் சார்பாக கேட்டுக் கொண்டும், அதனை சிறிதும் பொருட்படுத்தாத மத்திய அரசு, சிறிலங்கா விமானப்படையினருக்கு பெங்களூருவில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும், தற்போது சிறிலங்கா படை உயர் அதிகாரிகளுக்கு குன்னூர் தளத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு உயர் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பது புலனாகிறது.

மத்திய அரசின் இந்த அடாவடிப் போக்கினால் தமிழர்கள் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர்.

எனவே, தாங்கள் தலையிட்டு, சிறிலங்கா படையினரை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்தியாவின் எந்த மூலையிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று கூற வேண்டும் என்றும் இந்த கடிதத்தின் மூலம் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் என்று கூறியுள்ளார்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress