இந்திய வீடமைப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அமுல்படுத்துவதுவதற்கான பணிகளை நான்கு அமுலாக்கல் முகவரகங்களுக்கு ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் நேற்று கையெழுத்திட்டது.
இந்திய நிதியுதவியில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ், வடக்கு கிழக்கு மாகாணங்களில் 43,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்த அடுத்த கட்டத்தை ஐ.நா. ஹெபிடாட், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி முகவரகம், மனிதாபிமானத்திற்கான குடியிருப்பு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து அமுல்படுத்தவுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 ஜூன் மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட ராஜாங்க விஜயத்தின்போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக்கப்பட்ட 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி 43,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இவ்வீடமைப்புத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆர்வம்வெளிப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கையில் ஏற்கெனவே இத்தகைய திட்டங்களை அமுல்படுத்துவதில் அந்நிறுவனங்கள் கொண்டுள்ள அனுபவங்களைக் கருத்திற்கொண்டு, போட்டி முறைமையொன்றுக்கூடாக மேற்படி நான்கு நிறுவனங்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டமையானது, இத்திட்டத்தை விரைவாக அமுல்படுத்துவதற்கு வழியேற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் பயனாளிகள் தமது வீட்டை நிர்மாணிப்பதற்கு அல்லது புனரமைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை மேற்படி அமுலாக்கல் முகவரகங்கள் வழங்கும். வீடுகளுக்கான நிதியை நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களின் அடிப்படையில், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் நேரடியாக அனுப்பும்.
இலங்கை அரசாங்கம், களத்திலுள்ள மக்கள், ஜீவனோபாய நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்யும் இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகியனவற்றின் அடிப்படையில் இந்த ‘உரிமையாளர் உந்துதல் அணுகுமுறை’ பின்பற்றப்படுகிறது.
இவ்வீட்டுத்திட்டமானது அப்பகுதிகளின் வீடுகளுக்கான தேவைகளின் கணிசமானவற்றை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 6000 வீடுகள் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் அதிக ஆபத்திலுள்ள பிரிவினர், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பெருந்தோட்டப் பகுதிளைச் சேர்ந்த மக்களுக்காக நிர்மாண முகவரகங்களால் நேரடியாக நிர்மாணிக்கப்படும்.
இந்திய அரசின் உதவியினால் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களில் 1000 வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கை 2010 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. இவற்றில் 950 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கெனவே பூர்த்தியடைந்துள்ளதுடன் இவற்றில் பெரும்பாலானவை பயனாளிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டத்தின் எஞ்சிய வீடுகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாக்கப்படவுள்ளன.
மேற்படி 50,000 வீடமைப்புத் திட்டமானது இந்திய அரசின் 3,060 கோடி இலங்கை ரூபா நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Posted in