“2009ஆம் ஆண்டு ஐ.நாவிடம் வழங்கிய வாக்குறுதிகளை கொழும்பு நிறைவேற்றத் தவறிவிட்டது எனக்கூறி ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.” இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான “இந்து’வுக்கு அலரிமாளிகையில் வைத்து வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது “13ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலதிகமாக” என்ற வாக்குறுதிக்கு முதன்முறையாக விளக்கமளித்துள்ளார். “மேலதிக’ என்ற பதத்துக்கு “செனட் சபை உருவாக்கம்’ என்பதே பொருளாகும் என்றும் அவர் “இந்து’வுக்கு அளித்துள்ள பேட்டியில் வியாக்கியானம் அளித்துள்ளார்.
“13ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலதிகமாக” என்றே நான் கூறியுள்ளேன். அண்மையில் என்னைச் சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன், “மேலதிகமாக’ என்ற பதம், செனட் சபை உருவாக்கத்தையா சுட்டிக்காட்டுகிறது என வினவினார். நானும் ஆம் என்றே பதிலிறுத்தேன்” என்றும் ஜனாதிபதி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
செனட் சபை உருவாக்கம் மிக அவசியம். அதுபோல இனப் பிரச்சினைக்கு நாடாளுமன்றம் மூலம் தீர்வு காணப்பட வேண்டியதும் அதிமுக்கியமாகும். இத்தீர்வைப் பொறுத்தமட்டில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் தம் பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:
இப்போது முதல் இன்னும் ஓராண்டுக்குப் பின்னர், இலங்கையின் வட மாகாணசபைக்கான தேர்தல்கள் நடத்தப்படும். 2013ஆம் வருட செப்டெம்பரில் இத்தேர்தல்களை நடத்தவிருக்கிறோம்.
இவற்றிற்கான ஏற்பாடுகளை நாம் கிரமமாக மேற்கொண்டு வருகிறோம். இத்தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் அநேக விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டிய கட்டாயமும் உண்டு.
இவற்றில் தேர்தல் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரம் முதலில் தீர்க்கப்படவேண்டும். தமிழ்ப் புலிகளின் ஆதிக்கம் நிலவிய காலத்திலும், போர் நிகழ்ந்த காலத்திலும், மக்கள் தம் பகுதிகளைவிட்டு வெளியேறியுள்ளார்கள். 2009ஆம் வருடமே மாதத்தில் தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். வெளியேறிய மக்கள் அதுமுதல் இதுவரை தம் பகுதிகளுக்குப் படிப்படியாக வந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு மீள வருவோர் தங்களின் நிலத்துக்கும் உடைமைகளுக்கும் உரிமை கோருகின்றனர். தேர்தல்களில் பங்குபற்றுவதற்கு இவர்களும் உள்ளடக்கப்படவேண்டியவர்களே. இறுதி வாக்காளர் இடாப்புகள் 30 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இம்மாகாணத்தில் தற்போது நடைபெறும் தேர்தல்களில் சட்டரீதியாக வாக்களிக்க வேண்டியவர்கள் முன்னைய இடாப்புகளில் இல்லை.
இரண்டாவதாக மறுவாழ்வளிப்பு, மீள்குடியேற்ற முன்னெடுப்புகள் நிறைவுசெய்யப்பட வேண்டும். சர்வதேச ஆதரவுடன் இம்முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை வெகு விரைவில் பூர்த்தியடைந்துவிடும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இவர்களின் வாழ்வாதார விடயங்களிலும் நாம் கூடிய அக்கறை செலுத்திவருகின்றோம்.
தேர்தல்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் எதிர்நோக்கும் அரசியல் இடைவெளியை நீக்குவதற்கான முன்னெடுப்புகளை நகர்த்துவது அதிமுக்கியமானதொன்று. 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலமே இது அதிவிரைவில் சாத்தியப்படும். இதில் அதிகாரப்பகிர்வுக்கான விதியும் அடங்கியுள்ளது.
இந்த உடன்படிக்கையே 13ஆவது திருத்தச் சட்டமூலம் என பின்னர் அழைக்கப்பட்டு வருகிறது. இத்திருத்தச் சட்டத்தை இலங்கை அரசமைப்பும் உள்வாங்கியுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டமூலம் மிகவும் வரையறுக்கப்பட்ட முறையில் வடக்கைத் தவிர, அனைத்துப் பிராந்தியங்களுக்கும், அனைத்து மாகாணங்களுக்கும் பயனளிக்கிறது. இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சகல மட்டங்களிலும் இடம்பெறும் இராணுவ பிரசன்னம் குறித்தும் கேட்கப்பட்டதற்கு அவர், “தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் இராணுவப் பிரசன்னம் இடம் பெறவேண்டுமென நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு ஐ.நா. சபைக்குத் தான் அளித்த வாக்குறுதியை கொழும்பு நிறைவேற்றத் தவறிவிட்டது எனக் காரணம் கூறி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மறுத்துவிட்டார்.
அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான பணிகளில் எனது அரசு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. ஒப்படைக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றுவதில் அது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கும் அப்பால் காரியங்களை நிறைவேற்றுவதிலும் ஆர்வமாகவுள்ளேன் என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி முதல் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களின் நிலை குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு அவர் பதிலிறுக்கையில், “இச்சம்பவம் சம்பந்தமான தகவல்களை நான் முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும். இவ்விவகாரம் தொடர்பான நிலைப்பாடு குறித்து அறிக்கை பெற்றுள்ளேன். பொலிஸ் மா அதிபருடனும் தொடர்புகொண்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Posted in