கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற 5 கட்சிகளிடையேயும் புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமசந்திரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான இறுதி முடிவுகளை எடுப்பதற்காக நேற்று கூட்டமைப்பின் 6 பேர் கொண்ட குழு கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் பேச்சு நடத்தியது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவித்ததாவது:
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற 5 கட்சிகள் இடையிலே இணக்கப்பாட்டை எட்டுவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் எமது செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.இன்றும் மேற்படி குழு 6 பேரும் சந்தித்துக் கலந்துரையாடும் என்றார்.


Posted in