சிறிலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் நகர்வுகள் இன்னமும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சீன செய்தி நிறுவனமான, சின்ஹுவாவுக்கு நேற்று அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரஇறுதியில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் கலந்துரையாடியிருந்தார்.
ஆனால் எந்த முடிவோ முன்னேற்றமோ எட்டப்படவில்லை.
சிறிலங்கா அரசுடனான இருதரப்பு பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்ல முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கிறோம்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம் எம்முடன் பேச்சுக்களை மீளத் தொடங்குவதில் அக்கறையின்றி இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இருதரப்புப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்குள் கொண்டு வரவும் சிறிலங்கா அரசுக்கு ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுக்க முயன்றார்.
ஆனால் அவரது இந்த முயற்சிக்கு சிறிலங்கா அரசு சாதகமான பதிலைக் கொடுக்கத் தவறியுள்ளது“ என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காத நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாமும் இடம்பெறப் போவதில்லை என்று ஐதேக கூறி வருகிறது.
இதனால், எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை விரைவில் காண வேண்டும் என்று சிறிலங்காவின் மிகப்பெரிய அயல்நாடான இந்தியா, அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் முடங்கிப் போயுள்ளதாக சீன செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Posted in