கரும்புலிகளின் 25 ம் ஆண்டு நினைவு நிகழ்வு

TharKodaiyaalarNal

தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் உயிராயுதமாய் புயலாகி பகைவர் கோட்டைக்குள்ளும், கடற் கலன்களின் மீதும், பாரிய இலக்குகள் மீதும் மோதி தம்மையே தற்கொடையாக்கிய கரும்புலிகளின் நினைவுதினத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் பேரெழுச்சியோடு கலந்துகொண்டு அந்த மாவீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் நினைவுகளோடு, அவர்களின் கனவுகளையும், இலட்சியத்தையும் சுமந்தவர்களாக தமிழீழ விடுதலை பெறும்வரை அதற்காக போராடுவோம் என உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும் என தமிழகத்தில் இருந்து ஈழ விடுதலை ஆதரவுக் குரல்கள் ஒலித்துள்ளன.

1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி முதலாவது கரும்புலியாக வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தில் சென்று நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சிங்கள இராணுவத்தை இல்லாது செய்தவன் கப்டன் மில்லர்.

அவனோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீர விடுதலைப் போர் ஈழவரலாற்றில் என்றும் மறக்கமுடியாத, இமாலய சாதனைகளை படைத்திருக்கின்றது. தமிழீழ விடுதலைப் போரில் முதல் மாவீரனான லெப்.சங்கரின் நினைவு நாளை எவ்வாறு தேசியத் தலைவர் அவர்கள் “மாவீரர் நாள்” என அறிவித்து இன்றுவரை அப் புனித நாள் ஒரு தேசிய நினைவெழுச்சி நாளாக உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதோ அதே போல்…..

முதல் கரும்புலியான கப்டன் மில்லரின் நினைவுனாளான யூலை 5 ஆம் திகதி கரும்புலிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே 25 ஆம் ஆண்டு கரும்புலிகள் தின நினைவு நிகழ்வுகளில் மக்கள் அனைவரும் கொள்கையில், இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்களாக கலந்துகொள்ள வேண்டும். தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என தமிழகத்திலிருந்து தமிழின உணர்வாளர்களான தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் திரு.வேல்முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவழவன் மற்றும் திரைப்பட இயக்குனர் திரு.கெளதமன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்த வகையில் கரும்புலிகளின் 25 ஆம் ஆண்டான நினைவு தினமான 05-07-2012 அன்று அமைகின்றது. அன்றைய நாளிலே தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் பிரித்தானியாவில் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASSOCIATION LTD எனும் மண்டபத்தில் 05-07-2012 வியாழக்கிழமை மாலை 6:00 மணியிலிருன்து 9:00 மணிவரை நினைவு வணக்க நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் வெறும் வணக்க நிகழ்வாக கருதாமல் அந்த மாவீரர்களின் இலட்சியத்தை சுமந்தவர்களாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் விடுதலை பெற்ற வாழ்விற்காக தொடர்ந்தும் உழைப்போம் என உறுதியெடுத்துக் கொள்வோம்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress