தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள, சிறிலங்கா இராணுவத்தினரின் நில அபகரிப்புக்கு எதிராக, யூன் 26ல் செவ்வாய்கிழமை, உலகத் தமிழர் தேசங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழர் தாயகத்தின் முறிகண்டி ஆலய முன்றலில், எதிர்வரும் 26ம் நாள் நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறைகூவல் வெளிவந்துள்ளது.
நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் மெதுமெதுவாக ஆங்காங்கே மேலெழுந்து வருகின்றன.
தமிழர் தாயகத்தில் மேலெழும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, அதற்கு சமாந்திரமாக உலகத் தமிழர் தேசங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்டுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏலவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழர்கள் வாழும் தேசங்களெங்கும், யூன் 26ம் நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Posted in