இலங்கைக்குள் நவநீதம்பிள்ளை காலடி எடுத்து வைக்க அரசாங்கம் இடமளிக்குமானால் அது எமது நாட்டின் அழிவிற்கு ஆரம்பமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நாட்டை பிரிக்கும் இந்தியாவினதும், அமெரிக்காவினதும் நாடகத்தின் இறுதிக் கட்டம் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெளிவுபடுத்துகையில்,
வேலுப்பிள்ளை பிரபாகரனை பயன்படுத்தி பயங்கரவாதத்தின் மூலம் இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் இந்தியாவினதும், அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் முயற்சிகள் தோல்வி கண்டதையடுத்து தற்போது அரசியல் கருத்துக்கள் மூலம் எமக்கெதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
யானை தன் தலைக்கு தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதைப் போன்று, அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து “அதிகாரப் பொறிக்குள்’ சிக்கிக் கொண்டுள்ளது.
அவ் ஆணைக்குழு தனது எல்லையை மீறி இலங்கையில் இனப்பிரச்சினை இருப்பதாகவும், 13வது திருத்தம் அமுல்படுத்த வேண்டுமென்றும் பரிந்துரை செய்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணையை கொண்டு இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேற்றிக் கொண்டது.
இன்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் தலைமையிலான குழுவிற்கு இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்குமாறும் கோரப்பட்டுள்ளதோடு,
நவநீதம்பிள்ளையுடன் அனைத்து நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு பலமுனைகளில் அழுத்தங்களை பிரயோகித்து 13ஆவது திருத்தத்தை அமுல் செய்து நாட்டை துண்டாடுவதே இந்தியா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் திட்டமாகும்.
இதனை ஏற்றுக்கொள்வதென்பது ஜெனீவாவில் எமக்கெதிரான பிரேரணையை “சரியானதென்று’ ஏற்றுக்கொள்வதாக அமைந்து விடும். எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனமாக காய் நகர்த்தல்களை முன்னெடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இலங்கையின் அழிவின் ஆரம்பமாக நவநீதம்பிள்ளையின் வரவு அமைந்து விடும் என்றார்.


Posted in