வல்லுநர் வகுத்திடும் நீதியின் வாய்க்கால் – தோழர் தியாகு

எல்லாப் பார்வைகளும் ஜெனிவா நோக்கி! மீண்டுமொரு முறை! கடந்த 2009 மே தொடங்கி நாளது வரை ஐநா மனித உரிமை மன்றம் கூடும் போதெல்லாம் உலகத் தமிழர்களும்ம னித உரிமைப் பற்றாளர்களும் ஜெனிவாவின் திசை நோக்கிக் காத்திருப்பது வழக்கமாகி விட்டது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின் முழுதாக ஏழாண்டுக் காலம் கரைந்து விட்டது.

இந்தக் காலத்தில் தமிழர் இன அழிப்புக்குப் புதிய புதிய சான்றுகள் வந்து விட்டன. சிங்கள அரசு -மகிந்த-கோத்தபாய- மைத்திரி-பொன்சேகா கும்பல் – தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராக – அதிலும்சூ ட்டுத் தவிர்ப்பு வலையங்களிலேயே – கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்திய கொடுமையை கார்டியன் ஏடு மறுக்கவியலாச் சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளது.

ஆனாலும் தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைப்பதிருக்கட்டும், நடந்தது இன அழிப்பு என்ற உண்மையைக் கூட உலக நாடுகளோ ஐநாவோ இன்று வரை ஒப்புக்கொள்ளவில்லை.

இன அழிப்பு நிகழ்ந்த போது அதைத் தடுக்கத் தவறிய ஐநா அமைப்பு அது நிகழ்ந்த பின்… இழப்புக்காளான இனத்திற்கு ஈடுசெய் நீதி (remedial justice) வழங்கவும் தவறி விட்டது.

அப்படியானால் ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் நடத்தியுள்ள போராட்டங்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா? சேனல் 4 சார்பில் கலம் மக்ரே வெளியிட்ட ஆவணப்படங்கள், டப்ளின், பிரேமன் நிரந்தரத் தீர்ப்பாய அறிக்கைகள், ஐநா பொதுச் செயலரின் மூவல்லுநர் குழு அறிக்கை எல்லாமே வீண்தானா? ஐநா மனித உரிமை மன்ற விவாதங்கள்-தீர்மானங்கள், மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகப் புலனாய்வு அறிக்கை யாவும் பயனற்றுப் போயினவா?

ஐநா என்பது அரசுகளின் மன்றம்தானே தவிர, அதுவே உலக அரசன்று. அது தேசங்களின் சனநாயகப் பேரவையும் அன்று. ஒரு புறம் இன்றைய உலக ஒழுங்கின் ஏற்றத்தா ழ்வுகளும் வல்லரசுகளின் ஆதிக்க நலன்களும் ஐநா செயற்பாடுகளின் அடிநாதமாய் உள்ளன.

மறுபுறம் மாந்த குலத்தின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்குமான போராட்ட வரலாறு பிறப்பித்த விழுமியங்களும் வழிமுறைகளும் ஐநா பட்டயத்திலும் பல்வேறு உடன்படிக்கைகளிலும்பொ றிக்கப் பெற்றுள்ளன.

செயலுக்குரிய முடிவுகளை எடுக்கவும் நடைமுறைப்படுத்தவுமான இறுதி அதிகாரம் பாதுகாப்பு மன்றத்துக்கும், தடுப்பதிகாரம் படைத்த ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்குமே உள்ளதென்றாலும், ஐநா பொதுப் பேரவைக்கும் மனித உரிமை மன்றம்உ ள்ளிட்ட துணை அமைப்புகளுக்கும் உள்ள அற மதிப்பையும் அரசியல் மதிப்பையும்பு றக்கணிப்பதற்கில்லை.

உலக வல்லரசுகள் ஐநாவில் நினைத்ததை எல்லாம் சாதிக்க முடியும் என்றால், முள்ளிவாய்க்காலுக்குப் பின் 2009 மே இறுதியில் மனித உரிமை மன்றத்தில் சிறிலங்கா அரசைப்பா ராட்டித் தீர்மானம் இயற்றியதோடு இலங்கை உள்நாட்டுப் போர் என்ற கோப்பையே மூடி வைத்திருப்பார்கள்.

மூவல்லுநர் குழு அறிக்கை, வரிசையாக 2011, 2012, 2013 ஆண்டுகளில்இ யற்றப்பட்ட தீர்மானங்கள்… எதுவும் வந்திருக்காது. இவற்றின் குறைகள், இவற்றுக்குப்பி ன்னாலிருந்த அரச நலன்கள், உள்நோக்கங்கள் எல்லாம் ஒருபுறமிருக்க, நீதிக்கான போராட்ட நெருப்பை அணைய விடாமல் காக்கவும், மேலும் தூண்டி எரிய விடவும் இவை பயன்பட்டதை ஏற்கத்தான் வேண்டும்.

ஐநா மனித உரிமை மன்றத்தில் நீதிக்காக நடந்துள்ள போராட்டத்தின் கதையை மீண்டும்சொ ல்லத் தேவையில்லை எனக் கருதி, கடைசியாக நடந்ததை மட்டும் ஈண்டு நினைவுபடுத்திக்கொ ள்வோம். இறுதியாக 2015 செப்டெம்பரில் சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதஉரிமை உயர்ஆ ணையர் அலுவலகப் புலனாய்வு அறிக்கை (OISL Report) மனித உரிமை மன்ற அமர்வில்ஆ ணையர் மேதகு செய்யது ராத் அல் உசைன் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

சிங்கள அரசின்போ ர்க் குற்றங்களையும் மானிட விரோதக் குற்றங்களையும் உரிய சான்றுகளோடு தொகுத்துரைத்த இவ்வறிக்கை இனக்கொலை என்பதை உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை. இரு தரப்பிலுமான பன்னாட்டுச் சட்ட மீறல்களை விசாரிக்கும் பொறுப்பை இலங்கை அரசு கோரியது போல் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றிடம் விட உயர் ஆணையர் மறுத்து விட்டார்எ ன்றாலும், அதே இலங்கை அரசிடம் உள்நாடும் பன்னாடும் கலந்த கலப்புப் பொறிமுறையை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார் என்பது ஒரு தன்முரண்பாடுதான்.

இந்தக் குறைகள்இ ருப்பினும், மேற்படிப் புலனாய்வு அறிக்கை தமிழர்களும் மனித உரிமைச் செயற்பாட்டளர்களும்சொ ல்லி வந்த குற்றச்சாற்றுகளுக்கு வலுச் சேர்த்த அளவிலும், குற்றங்களை அமைப்புசார்கு ற்றங்கள் என்று வரையறுத்த அளவிலும் தமிழர்களின் நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக அமைந்தது.

இந்த வெற்றியைத் தட்டிப் பறிப்பது போல் 2015 அக்டோபர் முதல் நாள் ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானம் அமைந்தது. முன்பெல்லாம் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத்தீ ர்மானம் என்று சொல்லிக் கொண்டிருந்தது போக, இம்முறை அமெரிக்கா இலங்கையுடன்கூ ட்டாக முன்மொழிந்த தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது. இத்தீர்மானம் நியாயமான காரணமே இல்லாமல் இலங்கையை முதுகில் தட்டிக் கொடுத்து, விடுதலைப் புலிகளைத்த லையில் குட்டியது மட்டுமல்ல, புலனாய்வுக்கும் விசாரணைக்குமான பன்னாட்டுப் பொறிமுறை இருக்கட்டும், உயர் ஆணையர் கூறிய கலப்புப் பொறிமுறையைக் கூட வெளிப்படையாக வலியுறுத்தவில்லை.

ஆனால் இலங்கை அரசு சிறப்பு நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் அமைக்குமாறும், இந்த முயற்சியில் காமன்வெல்த் உள்ளிட்ட பன்னாட்டு நீதிபதிகளையும் புலனாய்வாளர்கள், வழக்குத்தொ டுநர்களையும், பிற வகை வல்லுநர்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் கோரியது. தமிழர்த ரப்பிலிருந்து தீர்மானத்தை ஆதரித்த சிலர் இது அப்படி நேராகச் சொல்லா விட்டாலும் கலப்புப்பொ றிமுறைக்கே வழிவகுத்திருப்பதாக வாதிட்டார்கள்.

சிறிலங்காவின் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவோ பன்னாட்டுப் பொறிமுறையோ கலப்புப் பொறிமுறையோ அமைக்க வேண்டிய தேவையைத் தவிர்த்து விட்டதாக வெற்றிப் பெருமிதத்துடன் மார்தட்டினார்.

பன்னாட்டு விசாரணை என்ற கோரிக்கையில் உறுதியாக நிற்கும் போதே மேற்சொன்ன அறிக்கை, தீர்மானம் தொடர்பாக என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. ஐநாவின் கதவுகள்த மிழர்களுக்கு இறுதியாக மூடப்பட்டு விட்டன எனக் கருதி ஐநா வழிப்பட்ட எல்லா முயற்சிகளையும் கைகழுவி விடுவோமானால் அது சிறிலங்காவுக்குத்தான் வசதியாகிப் போகும்.

சிறிலங்கா உலகத்தை ஏய்ப்பதற்கென்றாலும் சரி, அல்லது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்த லைமையமைச்சர் உருத்திரகுமாரன் பொருத்தமாகக் கூறியது போல், இலங்கையும் உலகமும்சே ர்ந்து தமிழர்களை ஏய்ப்பதற்கென்றாலும் சரி, ஐநாவே கருவியாகிப் போயிருக்கும். எனவே எவ்வளவுதான் கடினமாயிருந்தாலும், பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் ஐநா அமைப்பையும் அதன் மேடைகளையும் நடைமுறைகளையும் பயன்படுத்திக் கொள்வதுதான்ந மது போராட்டத்துக்கு நல்லது. அப்படியானால் என்ன செய்வது?

மனித உரிமை மன்றத்தின் 2015 செப்டெம்பர் அறிக்கையும் அக்டோபர் தீர்மானமும்ஏ ட்டளவில் நின்று போகின்றனவா? செயலுக்கு வந்தாலும் எவ்வாறு செயல்வடிவம்எ டுக்கின்றன? என்பதைக் கவனித்து வந்தால், குற்றம்புரிந்த சிறிலங்கா பன்னாட்டுச் சட்டத்தின்பி டியிலிருந்து தப்புவதற்கும், அதன் பாதுகாவலர்களும் கூட்டாளிகளும் குற்றவாளியைத் தப்பச்செ ய்வதற்கும் செய்யும் திருட்டுபுரட்டுகளை அம்பலப்படுத்த முடியும். அது தமிழ் மக்களின் நீதிப்போ ராட்டத்துக்கு ஊக்கமளிக்கும். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் உரைத்து ஒரு முடிச்சை அவிழ்க்கத் தன்னைச் சுற்றி ஒன்பது முடிச்சுகளைப் போட்டுக் கொள்ளும் பகைவனைக்க ளைப்புறச் செய்யும்.

உலகில் நம் நண்பர்களை உறுதிப்படுத்தி, புதிய நண்பர்களை ஈட்டிக்கொ டுக்கும். பகையாற்றல்களைப் பிரித்துக் கொடும்பகையைத் தனிமைப்படுத்தும். முதலாவதாக, நடந்த குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இது உலக நீதி. மகிந்த இராசபட்சேயே ஆனாலும் இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். (உண்மையில் ஐநா பொதுச் செயலர் பான் கி மூனுடன் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் மகிந்த இதை ஏற்றுக் கொண்டுள்ளார்.) இலங்கை தொடர்பான ஐநா தீர்மானங்கள், அறிக்கைகள் எல்லாவற்றிலும் பொறுப்புக்கூறல் வலியுறுத்தப்படுகிறது.

செப்டெம்பர் அறிக்கையும் அக்டோபர் தீர்மானமும் கூட பொறுப்புக் கூறல் என்ற அடிப்படையில்அ மைந்தவைதாம். ஆக, பொறுப்புக் கூறலுக்கு மறுப்புக் கூறலே இல்லை. இரண்டாவதாக, நடந்துள்ள குற்றம் மிகக் கொடியது, மிகப் பெரியது. இதை மூடி மறைத்தல் அரிது, இயலாது. இலட்சத்துக்கு மேற்பட்டவர்களைக் கொன்று புதைத்தை விட, அப்படிக் கொன்று புதைத்த உண்மையைக் கொன்று புதைப்பது கடினம். உண்மையை ஏற்றுக்கொ ண்டு நீதி வழங்குவது என்றால் சிங்களச் சிங்கம் தனது கொலைவாளைக் கீழே போட்டு விட வேண்டும்.

போட்டு விடும் படி சிங்களரே கேட்க வேண்டும். இது நடக்குமா? நீண்ட எதிர்காலத்தில் நடந்தாலும் நடக்கலாம். ஆனால் அது வரை தமிழர்களின் நீதிப் போராட்டத்தைக்கா க்கச் செய்ய முடியாது. காக்கச் செய்ய வேண்டிய தேவையும் இல்லை.

உண்மைகளை அறியவும், நீதி செய்து நல்லிணக்கம் காணவும் நாட்டமுள்ள சிங்களருக்காகவும் கூட பொறுப்புக்கூ றல் தேவைப்படுகிறது.

பெருமளவிலான மனித உரிமை மீறல்களால் காயம்பட்ட ஒரு சமூகம் அல்லது நாடு அதிலிருந்து மீண்டு, அமைதி, நல்லிணக்கச் சூழலுக்கு மாறிச் செல்ல வேண்டுமானால் நீதி வகையிலும் பிற வகையிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு மாற்றம்சார் நீதி (transitional justice) என்று பெயர். தமிழீழத் தமிழர்க்கு ஈடுசெய் நீதி தேவை என்றால் இலங்கை நாட்டுக்கே மாற்றம்சார் நீதி தேவைப்படுகிறது. பொறுப்புக் கூறல் இன்றேல் எவ்வகை நீதியும் ஈடேறாது.

பொறுப்புக் கூறலைத் தமிழர் தரப்பு வலியுறுத்துகிறது, மனித உரிமைகளின் உலகம்வ லியுறுத்துகிறது. சிங்கள அரசத் தரப்பால் இதை வெளிப்படையாக மறுக்க முடியவில்லை. ஏற்பது போல் ஏற்று ஏய்ப்பது எப்படி என்பதுதான் அதற்குள்ள கவலை. சுரண்டல்-ஆதிக்க நலன்களைப் புவிசார் அரசியல் என்ற மங்கல வழக்கிற்குள் மறைத்துக் கொள்ளும் உலக, வட்டார வல்லரசுகளுக்கும் இதே கவலைதான்.

இந்நிலையில் பொறுப்புக் கூறல் வெறும் பொய்மைக்கூ றல் ஆகி விடாமல் தடுப்பது எப்படி? உண்மையான பொறுப்புக் கூறல் மெய்ப்படச் செய்வது எப்படி? இந்த வினாக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு தந்த விடைதான் சிறிலங்கா தொடர்பான பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு (MONITORING ACCOUNTABILITY PANEL ON SRILANKA), சுருக்கமாக MAP. “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்” . (திருக்குறள் 471) என்பதற்கிணங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்த வலுவான நகர்வு இது.

இந்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றிருப்போர் சட்ட வல்லுநர்கள், இவ்வாறான பணியில் பழுத்த அனுபவம் பெற்றவர்கள், சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை அணிசெய்திடும் சான்றோர்கள். எப்படியிருந்தாலும் சிங்களப்பே ரினவாதிகளின் காமாலைக் கண்களுக்குப் பாயும் புலிகளாகத் தெரிவார்களோ? என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது. நவநீதம் பிள்ளை அம்மையாரையே பெண் விடுதலைப் புலி என்றார்களே! ஆனால் இன்று வரை அவர்களாலும் கூட கண்காணிப்புக் குழுவின் நடுநிலை குறித்துக் கேள்வி எழுப்ப இயலவில்லை.

மரீ குவிரோத் (பிரான்சு), பீட்டர் ஹேய்ன்ஸ் மற்றும் ரிச்சர்டு ஜெ. ரோஜர்ஸ் (பிரித்தானியா), ஹீதர் ரயன் (அமெரிக்கா), முன்னாள் நீதிநாயகம் அஜித் பிரகாஷ் ஷா (இந்தியா) … இந்த ஐவரும் பொறுப்புக் கூறல் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள வல்லுநர்கள். இவர்களுக்கு ஆலோசகராக ஜெப்ரி ராபர்ட்சன் செயல்படுகிறார்.

சிறிலங்கா தொடர்பான பொறுப்புக் கூறல் கண்காணிப்புக் குழுவின் பணி என்ன? போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், இனக் கொலைக் குற்றம் ஆகியவற்றைப்பு லனாய்வு செய்து வழக்குத் தொடுத்து உசாவலுக்கு உட்படுத்தும் நீதியியல் செயற்பாடுகள்உ ட்பட, இலங்கையில் மாற்றம்சார் நீதிப் பொறிமுறைகளின் வடிவமைப்பையும்செ யலாக்கத்தையும் கண்காணிப்பதே. இக்குழுவினர் தற்சார்பான கண்காணிப்பும் அறிவுரையும்ப ரிந்துரையும் வழங்குவர்.

பாதிப்புற்றவர்களின் கோணத்திலிருந்து பயனுள்ள பொறுப்புக் கூறல்வ ழிமுறைகளில் கவனம் செலுத்துவர். இஃதனைத்தும் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூறல் கண்காணிப்புக் குழு மனித உரிமை ஆணையர்க்குத் திறந்த மடல்எ ழுதியது உட்பட இது வரை செய்துள்ள பணிகளே அக்கறையுள்ள அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளன. கண்டு கொள்ளாமல் விட்டாலே காலி செய்து விடலாம் என்று முதலில்சி ங்களத் தரப்பு எண்ணியிருக்கக் கூடும். இப்போது நிலைமை மாறி விட்டது.

ஐநா மனித உரிமை மன்றத்தின் நடப்பு அமர்வில் உயர் ஆணையர் வாய்மொழி அறிக்கை தருவதற்கு முன்பே பொறுப்புக் கூறல் கண்காணிப்புக் குழு தன் அறிக்கையைத் தரப் போகிறது. சிங்கள ஊடகங்கள்ஏ ற்கெனவே சிங்கள அரசுக்கு இந்தக் குழுவினால் வரக் கூடிய ஆபத்து குறித்து எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கி விட்டன.

விலை போகாத அறிவும் விலை போகாத நேர்மையும் கொண்டவர்கள் அறம் சார்ந்து போராடும் போது அந்தப் போராட்டத்தை வெல்ல உலகில் எந்த ஆற்றலும் இல்லை என்பதை பொறுப்புக் கூறல் கண்காணிப்புக் குழுவும் அதன் அரும்பணியும் மெய்ப்பித்துக் காட்டும்.

வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது தமிழில் ஒரு பழைய சொலவடை. இது ஆதிக்கம்தொ டர்பானது. முள்ளிவாய்க்காலே கூட இதைத்தான் நமக்கு உணர்த்திற்று. வல்லுநர் வகுப்பதே நீதியின் வாய்க்கால் என்ற புதிய பாடத்தை பொறுப்புக் கூறல் கண்காணிப்புக் குழுவின் பணி உலகிற்கு உணர்த்தும். உண்மையும் நீதியும் நெருப்பொத்தவை, அவற்றைப் பொய்மைத் தாளில்பொ ட்டலம் கட்டி வைக்க முடியாது. பொறுத்திருப்போம், விழித்திருப்போம்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}