மே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்

அன்பான தமிழர்களே, 2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் 1,46,679 தமிழர்களைக் கொன்று குவித்து ஒரு மிகப் பெரிய இன அழிப்பை செய்து முடித்தது. மே17,18 ஆகிய நாட்களில் மட்டும் ஏறக்குறைய நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கண்ணுக்கெட்டும் தூரத்தில் நாம் 7 கோடி தமிழர்கள் இருந்தும் நம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்டனர்.

24980643-a631-46cb-9ae7-6ca552127bb7-264x350

தமிழகம் விழித்தெழும் எப்படியும் தங்கள் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும் என்று இறுதிவரை சமரசமின்றி போராடிய ஈழத் தமிழர்கள் இந்தியாவின் துணையுடன் வேட்டையாடப்பட்டார்கள்.

அமைதிப்பேச்சுவார்த்தையை முறித்த அமெரிக்கா, கொத்து குண்டுகளை வீச இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது. ரேடார்களை வழங்கி தமிழர்கள் தஞ்சமடைந்த இடங்களைக் காட்டிக் கொடுத்தது இந்தியா. இலங்கையுடன் ஆயுத ஒப்பந்தங்களைப் போட்டது சீனா.

போரை நிறுத்தி தமிழர்களைக் காக்க வேண்டிய ஐ.நா சபையும் மவுன சாட்சியாய் இலங்கைக்கு துணைபோனது.தங்களுக்கென்றொரு சின்னஞ்சிறு தேசம், அதில் அமைதியானதொரு வாழ்க்கை வாழ நினைத்த தமிழர்களை இனவெறி இலங்கையும், இந்திய,அமெரிக்க வல்லரசுகளின் அதிகாரத் தூண்களும் வாழவிடாமல் நசுக்கின.

ஈழத்தின் நிலப்பரப்பு புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஈழப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துபவர்கள்தான் இந்தியப் பெருங்கடல் என்றழைக்கப்படும் தமிழர் பெருங்கடல் முழுதும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும்.

சர்வதேச நாடுகள் தங்கள் ஆதிக்கத்திற்காகவும், வணிக நலனுக்காகவும் தமிழர்களை அழித்தொழிக்க இலங்கையுடன் கைகோர்த்தன. ஏழுஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர் பகுதிகள் முழுதும் சிங்களமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் தெருக்களெங்கும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

2009 இல் இனப்படுகொலையை நடத்தி முடித்தவுடன், விடுதலைப் போராட்டம் முடிந்து விடும் என்று கொக்கரித்தது இலங்கையும் சர்வதேச வல்லரசுகளும். ஆனால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராட்டத்தை தொடங்கிய தமிழர்கள், அரசியல் வழியில் விடுதலைப் கோரிக்கையை மீண்டும் உயர்த்திப் பிடித்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் விடுதலைக் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது. இதுதான் கொலையாளிகளுக்கு மிகப் பெரிய உறுத்தலாக இருக்கிறது.

இனப்படுகொலையை நடத்திய இவர்களின் அடுத்த நோக்கமாக தமிழீழ விடுதலைக் கோரிக்கையை அழிப்பது என்பது இருக்கிறது.

இதற்காகத்தான் இனப்படுகொலை என்பதை மறைக்க மனித உரிமை மீறல் என்றும், போர்க் குற்றம் என்றும் பல்வேறு வார்த்தைகளை நம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா தனது வணிக நலனுக்காக 13 வது சட்டத் திருத்தம் எனும் அயோக்கிய சட்டத்தையும், அமெரிக்கா தனது வணிக நலனுக்காக ஒரு அயோக்கிய தீர்மானத்தையும் முன்வைத்து தமிழீழ விடுதலையை அழிக்க எத்தனிக்கின்றன.

இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும், தமிழீழத்தில் நடந்தது விடுதலைப் போராட்டம் என்றும் தீர்ப்பளித்துள்ளது. இது 2009க்கு பிறகு சர்வதேச அளவில் நமக்கு கிடைத்துள்ள முதல் அங்கீகாரம். இதை உயர்த்திப் பிடிக்க வேண்டியது அவசியம்.

நாம் என்ன கோரிக்கைகள் வைக்க வேண்டும் என்பதை எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சர்வதேச வியாபாரிகள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நமது கோரிக்கையை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

வாழ்வுரிமை மற்றும் நல்லிணக்கம் என்பதை தமிழர்களுக்கான நீதியாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகவா லட்சக்கணக்கான மாவீரர்கள் உயிர்நீத்தார்கள்? சர்வதேச விதிகளின்படி, இனப்படுகொலைக்கு உள்ளான சமூகத்திற்கு நீதி என்பது அவர்களுக்கான பொது வாக்கெடுப்பே.

தமிழர்கள் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக நின்று கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கான நீதி என்பது தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்தியாவே போரை நிறுத்து எனக் கதறி இங்கு நம் முத்துக்குமார் உள்ளிட்ட 16 பேர் தீக்குளித்து இந்தியாவின் காலடியில் உயிர்நீத்தார்கள். ஆனால் நாம் இறுதி வரை ஒன்று கூடி நிற்கவில்லை.

துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட ஒன்றரை தமிழர்களை காப்பற்ற ஒன்றிணையாத குற்றவுணர்ச்சி நமக்கு இருக்கிறது.009 இல் மவுனமாக இருந்த நாம் இன்னுமா மவுனமாக இருப்போம். இன்னுமா சாதிகளாய், மதங்களாய், கட்சிகளாய் பிரிந்து கிடப்போம். எத்தனை நாள் தனிஅறையில் மட்டுமே நமது கண்ணீரை கொட்டி தீர்க்கப் போகிறோம்?

எந்த நாட்களில் கொத்துக் குண்டுகள் வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று விட்டு, தமிழர்களை அழித்துவிட்டோம் என்று கொக்கரித்தார்களோ அதே மே மாதத்தில் லட்சம் தமிழராய் எழுந்து நிற்போம். லட்சம் பிணங்களை பார்த்தும் ஒன்றிணையாவிட்டால், நமக்கு பெருமையும், வீரமும் பேசித் திரிய என்ன தகுதி இருக்கிறது?

ஒரு நாள் தமிழராய் ஒன்றிணைந்து நம் குரலை எழுப்பமாட்டோமா?

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புமே நமது கோரிக்கை.

எந்த சுதந்திர தமிழீழத்திற்காக லட்சம் தமிழர்கள் உயிர்விட்டார்களோ, அந்த சுதந்திர தமிழீழக் கோரிக்கையை உயர்த்திப் பிடிப்போம்.

ஏந்திப் பிடிப்பது மெழுகுவர்த்தியை மட்டுமல்ல, சுதந்திர தமிழீழ கோரிக்கையையும் தான்.

உங்களுக்காக மெழுகுவர்த்திகளும், தீக்குச்சிகளும் கடற்கரையில் காத்துக் கிடக்கின்றன.

100 ஆண்டுகளை கடந்தும் ஆர்மீனியர்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக இன்றும் கூடுகிறார்கள். யூதர்கள் 60 ஆண்டுகள் கழித்து இன்றும் தங்கள் வேலைகளை நிறுத்தி யூத இனப்படுகொலைக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள்.

சர்வதேசமும் இந்தியாவும் செய்த துரோகத்தினை மறக்க மாட்டோம். இலங்கையின் இனவெறியை நினைவுபடுத்துவோம். உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம்.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தமிழர் கடலின்(மெரீனா) ஓரத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழப் போராளி மக்களுக்கு வீர வணக்கம் செலுத்தி தமிழீழத்தை மீட்க உறுதியேற்போம்.நம் சந்ததிகள் இனப்படுகொலையை மறந்து விடாமலிருக்க வருடம்தோறும் கூடுவோம்.

மே 29 இல் தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மாலை 4 மணியளவில் கண்ணகி சிலையருகே ஒன்று கூடுவோம்.

 

Share On Facebook
Share On Twitter
Share On Google Plus
Share On Linkedin
Share On Pinterest
Share On Reddit
Share On Stumbleupon
Contact us
Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}