வாக்குறுதிகளை விடுத்து அரசியல் தீர்வை வழங்குமாறு சிறிலங்காவிடம் அமெரிக்க கோரிக்கை

இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட சிறுபான்மையின சமூகம் இன்னமும் தாங்கள் ஓரம்கட்டப்படுவதாகவே கருதுவதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் இலினோய்ஸ் மாநில காங்கிரஸ் சபை உறுப்பினர் டெனி கே டேவிஸ் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்து ஏழு வருடங்களாகியும் நீடிக்கும் இந்த நிலமையை மாற்றியமைத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப சிறிலங்கா அரசாங்கம் அர்ப்பணிப்புடன் வலுவானத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இந்த விடையங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணும் வரை சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளை வழங்கக் கூடாது என்றும் அமெரிக்க அரசிடம் டெனி கே டேவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் அமெரிக்க கறுப்பின மக்களினால் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவரான அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் டெனி கே டேவிஸ் சிறிலங்காவின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றியுள்ளார்.

சிறிலங்காவின் புதிய ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் பல்வேறு முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அவற்றை நடைமுறைப்படுத்தி நாட்டில் நிரந்தர அமைதியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமெரிக்கா அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை சிறிலங்கா அரசாங்கம் நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணும் வரை இராணுவ ரீதியிலான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதை அமெரிக்கா தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிக்கொண்டுள்ள போதிலும் சிங்களவர்கள் தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்களும் ஒரே நாட்டவர்கள் என்று சிந்திக்க்கூடிய சூழலை உருவாக்கவும் இல்லை என்பதுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் வெற்றிகொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொறுப்புக்கூறுதல் நீதியை உறுதிப்படுத்துதல் இனப்பிரச்சனைக்கான அரசியல்தீர்வை ஏற்படுத்துதல் ஆகிய விடையங்களில் சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியுள்ளதையும் நினைவுகூர்ந்த இலினோஸ் தொகுதி ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் தொடரும் நில அபகரிப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாது தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டுள்ளமை மனித உரிமை மீறல்கள் ஆகிய விடையங்களிலும் முன்னேற்றம் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை மாத்திரம் அள்ளி வீசுவதை விடுத்து அவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்தி தீர்வு காண அமெரிக்கா தொடர்ந்தும் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உறுப்பினர் டேவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}