எம்மைப்பற்றி

எம்மைப்பற்றி உங்களுடன்!

சங்கதி இணையத்தளம் 2005ம் ஆண்டு தமிழ்த் தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமாக தமிழீழத்தில் ஆரம்பிக்கப்பட்டு உலகப்பரப்பில் தமிழர்களிடையே தனது சேவையை ஆரம்பித்தது. அதன்பின்னர் புலம்பெயர் தேசத்திலுள்ள பல இளநிலை ஊடகவியலாளர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டு ஈழத்தின் கள நிலைசெய்திகளை உடனுக்குடன் தாங்கிவந்ததோடு இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழர்களது செய்திகளையும் உலகச்செய்திகளையும் இன்றுவரை இயன்றளவு உடனுக்குடன் தாங்கி வருகிறது.

மேலும், எமது ‘சங்கதி’ இணையத்தளத்திற்கு ஈழம், இலங்கை, தமிழகம் மற்றும் உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழும் ஊடகத்துறையினரதும் சக ஊடகங்களினதும் ஆதரவும் நன்மதிப்பும் கிடைக்கப்பெற்று, ‘சங்கதி’ தனக்கென ஒரு தனித்துவத் தன்மையைப் பேணிவருகிறது.

எமது இந்த ஊடகத்துறைப் பயணத்தைத் தொடர்ந்தும் முன்நகர்த்தி இணையப்பரப்பில் வலம்வர  பல ஊடகவியலாளர்களும் ஊடகத்துறை ஜாம்பவான்களும் எமக்கு உறுதுணை புரிகின்றனர்.

மே 2009 – க்குப் பின்னான காலத்தில் – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் முழுமையாகவே ஆயுதங்கள் மௌனிக்க செய்யப்பட்ட போதும் – “சங்கதி” எப்போதும் போல, தமிழ் பேசும் மக்களின் “நலன்” என்ற இலக்கு நோக்கியே தொடர்ந்தும் பயணித்து வருகிறது.

“சங்கதி” தமிழ் பேசும் மக்களுடன் என்றென்றும் இணைந்திருந்து – உண்மையை மட்டுமே அவர்களிடம் எடுத்துச் செல்லும் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

இலங்கைத் தீவிலும், தமிழ்நாட்டிலும், உலகப்பரப்பு எங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களதும், தமிழரல்லாத தமிழர் நலன் விரும்பிகளதும், மற்றும் அனைத்துலக சமூகத்தாரினதும் – ஒருங்கிணைப்புடனும், ஒத்துழைப்புடனும் “சங்கதி” தொடர்ந்தும் பணியாற்றும்.

தமிழ் சமுகத்தின் இயல்புகளான – உள்வாங்கும் சுபாவம், திறந்தமனப் பக்குவம், ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் என்பவற்றை வளர்த்தெடுக்கும் ஒரு தளமாகவும், அவற்றுக்கு வலுச்சேர்த்து, அவற்றைத் தமிழரது வாழ்வியல் பண்பாடாக மாற்ற முயல்வோருக்கான ஒரு களமாகவும் “சங்கதி” விளங்கும்.

உலக வரலாற்றை நகர்த்திய ஏனைய தேசிய இனங்களின் பட்டறிவுகளைப் பரிமாறி, உலகின் செல்நெறி பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்று – அவற்றுக்கு அமைவாக – ஈழத்தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அனைத்துலக மட்டத்தில் எடுக்கப்படும் ஈழத்தமிழரது அரசியல் முன்முனைவுகளுக்கும் “சங்கதி” துணையாய் இருக்கும்.

உண்மையை அறிய வைத்து, ஐயங்களைத் தெளிய வைத்து, செயற்படும் துணிவை ஊட்டி — தமிழ்த் தேசிய இனத்தை “சங்கதி” ஒரு நேரிய பாதையில் தொடர்ந்தும் அழைத்துச் செல்லும்.

நன்றி.

 

Powered by WordPress
Show Buttons
Hide Buttons
}