ஈழத்து நவீன ஊடகத்துறையின் புத்தம் புதியதொரு முகிழ்ப்பாக சங்கதி செய்திச் சேவை 2005ஆம் ஆண்டில் தோன்றியது. எண்ணிக்கையிலும் செய்தித்தரத்திலும் முதன்மைபெறும் தமிழ்ச் செய்திச் சேவைகளில் சங்கதி முன்னணி இடம் வகிக்கிறது. தாய்நாட்டின் நிலவரப் பிரதிபலிப்பாகவும் புலம்பெயர்ந்த தமிழுறவுகளின் தொடர்ப+டகமாகவும் சங்கதி செய்திச்சேவை தொழிற்படுகிறது. புகலிட வாழ்வு முழுமை பெறவும் தாயக உணர்வு வலுப்பெறவும் சங்கதி செய்திச் சேவை முனைப்பாக ஈடுபடுகிறது. சுருங்கக் கூறின் உலகளாவிய ஊடக சமூகத்திற்கும் புலம்பெயர்வாழ் இனிய தமிழுறவுகளுக்கும் தமிழீழத் தாயகத்தை முன்னிறுத்தும் ஊடகக் கருவியாகச் சங்கதி செய்திச் சேவை இடம்பெறுகிறது எனலாம்.
வேகமாக வளர்ந்துவரும் சங்கதி செய்திச்சேவை மிகப்பரந்தளவு வாசகர் தளத்தைக் கொண்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் சுடச்சுட வழங்கும் பாரம்பரியத்தை அது ஆரம்ப நாட்தொட்டுத் தன்பால் கொண்டுள்ளது. துல்லியம், நம்பகத்தன்மை, ஆதாரம், பக்கச்சார்பின்மை, வேகம் என்ற ஐந்துவகை சிறப்புக்களைக் கொண்ட சங்கதி பிற செய்திச்சேவைகளுக்கு வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் அமைகிறது. தனக்கென அமைத்துக் கொண்ட இலட்சிய வரம்புகளை மீறாது இன்றுவரை சங்கதி செய்திச்சேவை சிறப்பாக இயங்கிவருகிறது.
செய்திகளைத் தாங்கிச்செல்லும் மொழி தக்க பிரமாணத்தில் அமையவேண்டும் என்ற விதிமுறைக்கு அமைவாகப் பொறுப்புணர்வுடன் சங்கதி செயற்படுகிறது. பிறமொழி கலவாத் தமிழை எமது செய்தி வழங்கலில் பயன்படுத்துகிறோம். கண்வழி, செவிவழி எதுவோ அதுவே சொல்மொழி என்பது சான்றோர் வாக்கு. கண்ணால் பார்த்த, காதால் கேட்ட மொழிதான் பேச்சுமொழியாகத் தொடர்கின்றது. தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு முக்கிய கடமை இருக்கிறது. மறைந்து போகும் நல்ல தமிழ்ச்சொற்களை மீண்டும் பாவனைக்குக் கொண்டுவரும் பொறுப்பு அதற்கு இருக்கிறது. மொழி வளர்ச்சியில் சங்கதி செய்திச் சேவை தீவிர கவனம் எடுக்கின்றது. இதைக் கற்றோரும் மற்றோரும் விதந்து பாராட்டியுள்ளார்கள்.
சங்கதி செய்திச் சேவைக்கு உயிரூட்டுவது உடனுக்குடன் செய்திகளை வழங்கும் வேகமும், செய்திகளின் நம்பகத்தன்மையும், பிறமொழி கலவாத் தூயதமிழும், தனது செயற்பாடுகளில் சங்கதி காட்டும் ஈடுபாடும் பொறுப்புணர்வும் என்று உறுதிபடக் கூறிவைக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக சங்கதி தொடர்ச்சியாக இயங்கும் 24மணிநேரச் செய்திச் சேவையாகும்.

